குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்

திருச்சி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப் படும் என்று கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி கூறினார்.

Update: 2018-05-01 22:04 GMT
திருச்சி,

ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் பெரியநாயகி சத்திரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி முன்னிலை வகித்து பேசியதாவது:-

கிராம வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் உதவும் அரசுத்திட்டங்கள் முழுமையாக சென்றடைவதை கிராமசபைக் கூட்டங்கள் உறுதிப் படுத்துகின்றன. பொதுமக்கள் குடிநீரை வீணாக்க கூடாது. திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை அனைத்துப்பகுதிகளிலும் குடிநீர் வசதி வழங்கப்பட்டு வருகின்றது. நிலத்தடிநீர் குறைந்த இடங்களிலும், குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ள பகுதிகளிலும் மாற்று ஏற்பாடாக பழுது நீக்கம், புதிய ஆழ் துளை கிணறு அமைத்தல், குடிநீர் குழாய் விஸ்தரிப்பு ஆகிய பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த துண்டு பிரசுரங்களை கலெக்டர் பொதுமக்களுக்கு வழங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் பொன்ராமர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்வகணபதி, சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர்.ரவீந்திரன், ஸ்ரீரங்கம் தாசில்தார் சண்முகம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அல்லித்துறையில் நடை பெற்ற கிராமசபை கூட்டத்துக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கிராம வளர்ச்சி திட்ட பணிகள் பற்றியும், ஆண்டு திட்டங்கள் தயாரித்தல், கிராமத்தின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

துறையூர் மதுராபுரி ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு துறையூர் தாசில்தார் ரவிசங்கர் தலைமை தாங்கினார். துறையூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் (கிராம பஞ்சாயத்து) மா.கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், வருகிற கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீரை மோட்டார் மற்றும் முறையற்ற இணைப்புகள் மூலம் பெறாமல் அனைவரும் குடிநீர் பெறும் வகையில் உபயோகிக்க வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உப்பிலியபுரம் அருகே உள்ள தளுகை ஊராட்சி என்பது 5 பெரிய கிராமங்களான த.பாதர்பேட்டை, டி.முருங்கப்பட்டி, டி.மங்கபட்டி, வெள்ளாளப்பட்டி, டி.மங்கப்பட்டி புதூர் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம், பள்ளியில் உள்ள கூட்டரங்கம், சமுதாயக்கூடம் போன்ற இடங்களில் நடத்தினால்தான் கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து கலந்து கொள்ள வசதியாக இருக்கும். ஆனால் நேற்று நடந்த கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்ற வளாகத்தில் உள்ள இடத்தில் நடைபெற்றது. இதனால், கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பெரும்பாலானவர்கள் அருகில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து தங்கள் கோரிக்கை மனுக்களை எழுதி கொடுத்தனர். இனிவரும் காலங்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையிலான கட்டிடங்களில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

புள்ளம்பாடி ஒன்றியம் இ.வெள்ளனூர் ஊராட்சியில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையிலும், கல்லகம் கிராமத்தில் ஒன்றிய உதவி பொறியாளர் கணேஷ்வரன் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதேபோல் கீழரசூர், ஊட்டத்தூர், நம்புகுறிச்சி, நெய்குளம், கண்ணனூர், ஆலம்பாடி, மேட்டூர், மேலரசூர், வெங்கடாஜலபுரம், கோவண்டாகுறிச்சி, புஞ்சைசங்கேந்தி, கண்ணாகுடி, குமுளூர், பெருவளப்பூர், சிறுகளப்பூர், விரகாலூர், திண்ணக்குளம், ஆலம்பாக்கம், புதூர்பாளையம், முதுவத்தூர், மால்வாய், சரடமங்கலம், கருடமங்கலம், பி.கே.அகரம் உள்ளிட்ட 33 ஊராட்சிகளில் ஒன்றிய மேற்பார்வையாளர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்