சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை ; கிராமங்கள் இருளில் மூழ்கின

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பவானி பகுதியில் 30 கிராமங்கள் இருளில் மூழ்கின.

Update: 2018-05-01 22:30 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் நடமாடுவதற்கே தயங்குகிறார்கள். அனல் காற்று வீசியதால் வீதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. கடந்த ஒரு மாதமாக 100 டிகிரியை கடந்து வெயில் கொளுத்தியது. நேற்று முன்தினம் பகலில் 106 டிகிரி வரை வெயில் பொதுமக்களை சுட்டெரித்தது. வெப்ப சலனம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடுமையான அவதி அடைந்தனர். குறிப்பாக கைக்குழந்தைகளை வைத்திருப்பவர்கள் வீடுகளில் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் கூடிய மழை ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது.

புஞ்சைபுளியம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு 12.30 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் மழை நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம், புங்கம்பள்ளி, பனையம்பள்ளி ஆகிய இடங்களிலும் பலத்த மழை பெய்தது.

புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள நம்பியூர் தோட்டசாலை ரோட்டில் நகராட்சி குப்பைக்கிடங்கு உள்ளது நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையின் காரணமாக குப்பைக்கிடங்கின் சுற்றுச்சுவர் நேற்று மாலை 4.30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் 5 மின்கம்பங்கள் சேதம் ஆனது. இதில் 2 மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன. மேலும் ஒரு மின்கம்பம் அந்தப்பகுதியில் வசித்து வரும் சுப்பையன் (வயது 60) என்பவரின் வீட்டின் மீதும் விழுந்தது. இதனால் வீட்டின் ஓடுகள் உடைந்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. மேலும் உடனடியாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தி மாற்று மின்கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பவானியில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் 1½ மணிநேரம் பலத்த மழை பெய்தது. பின்னர் அதிகாலை 3 மணி வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழை காரணமாக பவானி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சூறாவளிக்காற்றால் தளவாய்ப்பேட்டை பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கம்பிகள் ஒன்றோடொன்று உரசியது. இதனால் இரவு 10 மணி அளவில் மின்தடை ஏற்பட்டது. பவானி நகரம், ஜம்பை, காடையாம்பட்டி, தளவாய்ப்பேட்டை, ஒரிச்சேரி, ஊராட்சிக்கோட்டை உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. இதுபற்றி அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மின் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 6 மணி அளவில் மின் வினியோகம் சீரானது. 8 மணி நேரம் பல கிராமங்கள் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

அம்மாபேட்டை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பலத்த சூறாவளிக்காற்று வீசியது. பின்னர் 10 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நள்ளிரவு வரை நீடித்தது.

இதேபோல் கோபி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

மேலும் செய்திகள்