காங்கிரஸ் ஒரு நாடக கம்பெனி: ராகுல் காந்தி நாடகம் நடத்துகிறார்

காங்கிரஸ் ஒரு நாடக கம்பெனி, ராகுல் காந்தி நாடகம் நடத்துகிறார் என்று மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

Update: 2018-04-30 23:15 GMT
பெங்களூரு,

மத்திய திறன் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புத்துறை இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே, முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் காங்கிரசை பற்றி மிக கடுமையாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். அவர் அரசியல் சாசனத்தை மாற்றப் போவதாக பேசி நெருக்கடிக்கு ஆளானார். அவரது கருத்துக்கு நாடு முழுவதும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கருத்துக்கு நாடாளுமன்றத்தில் அனந்தகுமார் ஹெக்டே மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மத்திய இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே நேற்று பெலகாவியில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார். அவர் பேசியதாவது.

நமது நாட்டில் இந்து மதமும் உள்ளது என்பதை ராகுல் காந்தி இப்போது தான் தெரிந்து கொண்டுள்ளார். அதனால் தான் அவர் கோவில்கள், மடங்களுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார். கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தை எப்படி பெறுவது என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது. யாரோ சிலர் கூறியதால் அவர் கோவில்களுக்கு செல்கிறார்.

காவி உடையில் ருத்ராட்சை மாலையுடன் கோவிலுக்கும், குல்லா அணிந்து மசூதிகளுக்கும் ராகுல் காந்தி செல்கிறார். இதன் மூலம் அவர் நாடகம் நடத்தி வருகிறார். இதில் வேறு ஒன்றும் இல்லை. காங்கிரஸ் ஒரு நாடக கம்பெனி. காங்கிரஸ் இருக்கும் வரை நாடு வளர்ச்சி அடையாது. காங்கிரசாருக்கு நேர்மை கிடையாது.

பக்தியுடன் கோவில்களுக்கு செல்ல தெரியாது. மற்றவர்கள் போகிறார்கள் என்பதற்காக காங்கிரசார் கோவில்களுக்கு செல்கிறார்கள். வரும் நாட்களில் இந்த நாடக கம்பெனி நாட்டில் இருக்கக்கூடாது. நாட்டை காங்கிரஸ் கொள்ளையடிக்கிறது. மதத்தை அவமரியாதையாக நடத்துகிறது. இவ்வாறு அனந்தகுமார் ஹெக்டே பேசினார்.

காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர் ராகுல் காந்தி பற்றி மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவின் இந்த பேச்சு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் ஜெயின் கோவில் பற்றியும் பேசியிருந்தார். இதற்கு அவரை கண்டித்து ஜெயின் மதத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்