கட்சி நிர்வாகியை போலீசார் பிடித்து சென்றதால் அ.ம.மு.க.வினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கட்சி நிர்வாகியை போலீசார் பிடித்து சென்றதால் அ.ம.மு.க.வினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2018-04-30 23:15 GMT
சங்கரன்கோவில்,

சங்கரன்கோவிலில் அ.ம.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளரை போலீசார் பிடித்து சென்றதால், அக்கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

சங்கரன்கோவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு ஒன்றிய செயலாளர் குருசேவ். இவர் நேற்று சங்கரன்கோவில் சங்கரநாராயண கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றதால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அங்கு நின்று கொண்டிருந்தார். இந்த நிலையில் சங்க அதிகாரியின் அறையை யாரோ பூட்டு போட்டு பூட்டி சென்று விட்டனர். இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் நிர்வாகிகளுடன் குருசேவ் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சங்கரன்கோவில் போலீஸ் டவுன் இன்ஸ்பெக்டர் அருளுக்கும், குருசேவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் குருசேவை சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்திற்கு பிடித்து சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த அக்கட்சியின் மாவட்ட மாணவரணி செயலாளர் சின்னத்துரை தலைமையில், நகர செயலாளர் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அருள், கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் குருசேவை போலீசார் விடுவித்தனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1½ மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்