ராமேசுவரம் பகுதியில் தமிழக சட்டப்பேரவை குழு ஆய்வு

ராமேசுவரம் பகுதியில் தமிழக அரசின் பல்வேறு பணிகள் குறித்து தமிழக சட்டப்பேரவை குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2018-04-24 22:15 GMT
ராமேசுவரம்,

தமிழக அரசு சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன், தனியரசு, பழனிவேல் தியாகராஜன், மாணிக்கம் ஆகியோர் கொண்ட தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் நேற்று ராமேசுவரம் வந்தனர்.

முன்னதாக இவர்கள் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுவரும் யாத்திரை நிவாஸ் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர். அப்போது வரைபடத்தை பார்த்து கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோரிடம் கட்டுமான பணிகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் பஸ் நிலையம் அருகே நகராட்சி பூங்கா மறு சீரமைப்பு பணிகளையும், தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் அருகே ரூ.8 கோடி செலவில் அமைக்கப்பட்டு மீன்பிடி இறங்குதளம் உள்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட சுற்றுலா அலுவலர் மருதுபாண்டியன், தாசில்தார் சந்திரன், நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் இந்த குழுவினருடன் சட்டமன்ற செயலாளர் சீனிவாசன், கூடுதல் செயலாளர் வசந்தி மலர், துணை செயலாளர் தேன்மொழி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை ஆகியோரும் உடன் வந்திருந்தனர். அதனை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி நிருபர்களிடம் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை 2 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளோம். மேலும் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் விவாதித்து அரசின் நிதி முறையாக செலவிடப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வோம். நாளை (அதாவது இன்று) ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்