முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 3 பேரிடம் நில மோசடி; 2 பேர் கைது

முன்னாள் ஊராட்சி தலைவர் உள்பட 3 பேரிடம் நில மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-24 22:00 GMT
காரைக்குடி,

காரைக்குடி அருகே உள்ள பிரம்புவயல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து(வயது 53). இவரிடம் காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்த பவுலின்(37) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு பணபரிவர்த்தனையில் அரசு எடுத்த நடவடிக்கைக்கு பின்னர் வங்கியில் இருக்கும் தனது பணத்தை எடுக்க முடியவில்லை என்றும், பணத்தை எடுக்க மணிமுத்துவின் நிலத்தை தனது பெயருக்கு கிரயம் செய்து தருமாறும் கேட்டுள்ளார். இதனால் மணிமுத்து தனக்கு சொந்தமான 1 ஏக்கர் மற்றும் 50 சென்ட் நிலத்தை ரூ.20 லட்சம் மதிப்பிட்டு, பவுலின் பெயருக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் பவுலின் ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. மாறாக ரூ.3 லட்சத்திற்கான செக் ஒன்றை கொடுத்துள்ளார். அதுவும் பணம் இல்லை என்று திரும்பிவிட்டது. இதனால் மோசடி செய்துவிட்டதை அறிந்த மணிமுத்து இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல் சித்திவயலை சேர்ந்த வீரப்பன் என்பவரிடம் 1 ஏக்கர் மற்றும் 3 சென்ட் நிலத்தை பவர் பத்திரம் மூலம் பெற்ற பவுலின், அந்த பத்திரத்தை காரைக்குடி ஆறுமுகநகரை சேர்ந்த செந்தில் என்பவருக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார். பின்னர் வீரப்பனுக்கு பணம் கொடுக்கவில்லை. இதேபோன்று அதே பகுதியை சேர்ந்த மாசான் என்பவர் பவுலினிடம் ரூ.50 ஆயிரம் கடன் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் இருந்து 2 ஏக்கர் மற்றும் 74 சென்ட் நிலத்தை பவுலின் மோசடி செய்து எழுதி வாங்கியுள்ளார். தற்போது மாசான் வாங்கிய கடனை திருப்பி கொடுத்தும் நிலத்தை பவுலின் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து வீரப்பன், மாசான் ஆகியோர், பவுலின் நிலமோசடியில் ஈடுபட்டதாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பவுலின் நில மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து பவுலின் மற்றும் நிலமோசடியில் சம்பந்தப்பட்ட செந்தில் ஆகியோரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்