வெடி வைத்து பாறையை தகர்த்தபோது பறந்து வந்த கல் விழுந்து பெண் படுகாயம் 2 பேர் கைது

கல்பாக்கம் அடுத்த அணைக்கட்டு அருகே பாறையை தகர்த்தபோது பறந்து வந்த கல் விழுந்து பெண் படுகாயமடைந்தார்.

Update: 2018-04-24 22:30 GMT
கல்பாக்கம், 

கல்பாக்கம் அடுத்த அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட முருகம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியம் என்ற பாக்கியலட்சுமி (வயது 60). சம்பவத்தன்று இவர், வயலில் வேர்க்கடலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அருகில் உள்ள பாறையை சிலர் வெடி வைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். பாறை வெடித்து சிதறியபோது அதில் ஒரு கல் பறந்து வந்து அங்கு வேர்க்கடலையை பறித்து கொண்டிருந்த பாக்கியம் தலையில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார்.

இது குறித்த புகாரின்பேரில் அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக பாறையை வெடி வைத்து தகர்க்கும் தொழிலாளியான சென்னையை அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (50), முருகம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் (50) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் 2 பேரை தேடி வருகிறார். 

மேலும் செய்திகள்