10 மடங்கு பணம் தருவதாக ரூ.5 லட்சத்தை பறித்துக்கொண்டு ஓட்டம் மர்மநபர்கள் 4 பேர் காருடன் கைது

கண்ணமங்கலம் அருகே காரைக்காலை சேர்ந்தவரிடம் 10 மடங்கு பணம் தருவதாக கூறி காரில் வந்த மர்மநபர்கள் அவரிடம் இருந்து ரூ.5 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பினர். அவர்களில் 4 பேரை போலீசார் காருடன் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

Update: 2018-04-23 23:27 GMT
கண்ணமங்கலம்,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 38). இவரை செல்போனில் தொடர்பு கொண்ட சிலர் தங்களிடம் பணம் கொடுத்தால் 10 மடங்கு உயர்த்தி தருவதாகவும் ரூ.5 லட்சம் கொடுத்தால் 10 மடங்காக ரூ.50 லட்சம் தருவதாகவும் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்துக்கு வருமாறும் கூறியுள்ளனர். அதனை உண்மை என நம்பிய அந்தோணிராஜ் ரூ.5 லட்சத்துடன் நேற்று கண்ணமங்கலத்துக்கு வந்தார்.

இங்கு மீண்டும் அவர்களை அந்தோணிராஜ் தொடர்பு கொண்டபோது ஆரணி மெயின்ரோடு அம்மாபாளையம் கூட்ரோடு பகுதிக்கு வருமாறு அழைத்தனர்.

இதனையடுத்து அந்தோணிராஜ் அம்மாபாளையம் கூட்ரோடு பகுதியில் ரூ.5 லட்சத்துடன் காத்திருந்தார். அப்போது அங்கு காரில் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்தோணிராஜிடம் அவர்கள் ரூ.5 லட்சத்தை தரும்படி கேட்டனர். அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்ததால் உடனடியாக அவர் பணத்தை தரவில்லை. இதனையடுத்து 6 பேரும் அவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினர். அவர்களது கார் திருவண்ணாமலை பிரதான சாலை வழியாக சென்றது.

இது குறித்து கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் அந்தோணிராஜ் புகார் அளித்தார். அதன் பேரில் கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மற்ற பகுதியில் உள்ள போலீசாரை தொடர்புகொண்டு வாகன தணிக்கை செய்யுமாறு கூறிவிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில் வண்ணாங்குளம் பகுதியில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த காரை வழிமடக்கினர். போலீசாரை கண்டதும் காரை நிறுத்திவிட்டு அதிலிருந்த 6 பேரும் கீழே இறங்கி தப்பி ஓட முயன்றனர்.

அவர்களை போலீசார் விரட்டியதில் 4 பேர் சிக்கினர். விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் பிரபாகர் (51), ராகுல் (27), வேலூர் காட்பாடியை சேர்ந்த சஜாஸ் அகமது (39), மதுரையை சேர்ந்த கார்த்திகை ராஜன் (42) என்பதும், தப்பியோடிவர்கள் ஷேக் அப்துல்லா, சிவா என்ற அஷ்ரப் அலி என்பதும் தெரியவந்தது.

அந்தோணிராஜிடம் இவர்கள் ரூ.5 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பியதும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து ரமேஷ்பிரபாகர் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து ரூ. 5 லட்சத்தையும், அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கண்ணமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்