குன்றத்தூரில் 8-ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை 2 சிறுவர்கள் கைது

குன்றத்தூரில் 8-ம் வகுப்பு மாணவனை அடித்துக்கொலை செய்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-23 22:35 GMT
பூந்தமல்லி,

சென்னையை அடுத்த குன்றத்தூர், கொல்லச்சேரி, கருமாரி அம்மன் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 45). சமையல் தொழிலாளி. இவரது மனைவி கீதா. இவர்களுடைய மகன்கள் தீனதயாளன் (14), மணிகண்டன் (12). இதில் தீனதயாளன் குன்றத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். மணிகண்டன் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

நேற்று முன்தினம் முதல் தீனதயாளன் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தான். அவன் தொடர்ந்து வாந்தி எடுத்ததால் பயந்துபோன பெற்றோர் அவனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அவனை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உயிரிழந்தான்

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தீனதயாளனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் உறைந்து உள்ளதாக தெரிவித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி தீனதயாளன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது அப்பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பிகளான 16 வயதுடைய 2 சிறுவர்கள்தான் தீனதயாளனை கிரிக்கெட் ஸ்டெம்பால் தலையில் தாக்கியதும் அதன் காரணமாக தீனதயாளன் இறந்து போனதும் தெரியவந்தது.

இதையடுத்து அண்ணன், தம்பிகளான சிறுவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஸ்டெம்பால் தாக்கினார்கள்

இதுகுறித்து நடத்திய விசாரணையில் வெளியான தகவல் பின்வருமாறு:-

தீனதயாளனுக்கும், அண்ணன், தம்பிகளான அந்த சிறுவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த தீனதயாளனிடம் அண்ணன், தம்பிகளான இருவரும் தங்களை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளுமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் ஏற்கனவே இருந்த முன் விரோதம் காரணமாக ஆத்திரம் அடைந்து கிரிக்கெட் ஸ்டெம்பை எடுத்து தீனதயாளனின் தலையில் சரமாரியாக தாக்கினார்கள்.

சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

ஆனால் தீனதயாளன் அந்த சிறுவர்கள் தாக்கியதை கூறாமல் அவர்கள் தகராறில் ஈடுபட்டதாக மட்டும் தனது பெற்றோரிடம் கூறி உள்ளான். இதுகுறித்து அவனது பெற்றோர் குன்றத்தூர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து இரு தரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பந்தப்பட்டவர்கள் சிறுவர்கள் என்பதால் எச்சரிக்கை செய்து அனுப்பிய போலீசார் அண்ணன், தம்பிகளான அந்த இரண்டு சிறுவர்களையும் அரசு பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தலையில் காயத்துடன் இருந்த தீனதயாளன் உடல்நிலை மோசமானதை தொடர்ந்தே பெற்றோரிடம் சிறுவர்கள் தாக்கியதை கூறி உள்ளான்.

இந்தநிலையில் தீனதயாளன் இறந்துவிட்டதால் அண்ணன், தம்பிகளான அந்த சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்