பழுதான டிரான்ஸ்பார்மரை சீரமைக்க விவசாயிகளிடம் பணம் கேட்கும் மின்சார வாரிய அதிகாரிகள்: கலெக்டரிடம் புகார் மனு

டிரான்ஸ்பார்மர் பழுதானதால், அதை சீரமைக்க மின்சார வாரிய அதிகாரிகள் பணம் கேட்பதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.

Update: 2018-04-23 22:15 GMT
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். இதில், பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் மனுக்கள் அளித்தனர்.

அந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில், 37 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 910 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், தொழிலாளர் நலத்துறை சார்பில் 25 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான உத்தரவையும் கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், கூடலூர் பெருமாள்கோவில் புல விவசாயிகள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘பெருமாள்கோவில் புலத்தில் நீண்ட காலமாக விவசாயம் செய்து வருகிறோம். கடந்த 15-ந்தேதி இந்த பகுதிகளுக்கு மின்சார இணைப்பு வழங்கி வந்த மின்சார டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டது. சிலர் கொக்கி போட்டு மின்சாரம் எடுத்ததால் இந்த பழுது ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தால் சீரமைப்பு பணிக்கு ரூ.87 ஆயிரம் தொகையை விவசாயிகள் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். எனவே, கொக்கி போட்டு மின்சாரம் எடுக்க உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, மின்சார டிரான்ஸ்பார்மரை சீரமைத்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இதேபோல் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி இயக்கத்தின் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நிர்வாகிகள் சிலர், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘தேனி புதிய பஸ் நிலையத்தில் உள்ள மதுக்கடைகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டதற்கு நன்றி. வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக போக்குவரத்து வழித்தடத்தில் மாற்றம் செய்யாமல், புறவழிச்சாலையில் வாகனங்கள் இயக்க வேண்டும். தேனி நகர பஸ்களில் பழைய பஸ் நிலையம் என போர்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காமராஜர் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. எனவே, தேனி நகர பஸ்களில் பழைய பஸ் நிலையம் என்று போர்டு வைத்திருப்பதை காமராஜர் பஸ் நிலையம் என்று மாற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

மயிலாடும்பாறையை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘மயிலாடும்பாறையில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் சரிவர வழங்குவது இல்லை. பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

தேனியை அடுத்துள்ள அரண்மனைப்புதூர் முல்லைநகரை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் அளித்த மனுவில், ‘தேனி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக நீர்நிலைகளில் மணல் அள்ளி செல்கிறார்கள். கனிமவளத்துறை மூலம் நிலம் சீரமைப்பு என்ற பெயரில் அனுமதி வாங்கி, அருகில் உள்ள ஓடைகளில் மணல் அள்ளி வருகின்றனர். இதற்கு போலி நடைச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது. மணல் அள்ளுவதை தடுக்க வருவாய்த்துறை உயர் அதிகாரி தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மணல் அள்ளுவதற்கு துணை போகும் கனிமவளத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செய்திகள்