பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்து பாதை பிரச்சினைக்கு தீர்வு
பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நில அளவீடு செய்து பாதை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.
சின்னமனூர்,
சின்னமனூர் அருகே உள்ள சின்ன ஓவுலாபுரம் ஆதிதிராவிடர் காலனியில் 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இந்த காலனிக்கு செல்லும் நடை பாதையை தனியார் ஒருவர் சொந்தம் கொண்டாடி அடைத்து விட்டார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும் வருவாய்த்துறையினரை கண்டித்து கிராமத்தை காலி செய்து முத்துலாபுரம் வெள்ளக்கரட்டில், ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த மக்கள் குடியேறி, அங்கு சமைத்து உறங்கும் போராட்டத்தை நடத்தினர். இது தொடர்பாக 150 பேரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இது தொடர்பாக நிலத்தை அளவீடு செய்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீடு செய்யும் பணி நேற்று நடந்தது. நில அளவைத்துறை உதவி இயக்குனர் சாந்தி தலைமையில் வருவாய்த்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டனர்.
அப்போது காலனி மக்களுக்கு வழங்கப்பட்ட 93 சென்ட் நிலம் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்றும், 2 சென்ட் நிலத்தை தனியார் ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்தது. அந்த இடத்தில் வைக்கோல் படப்பு உள்ளது. அதனை 2 நாட்களில் அகற்றி விடுவதாக ஆக்கிரமித்த நபர் தெரிவித்தார். மேலும் காலனி மக்கள் பயன்படுத்திய நடைபாதை, 2 பேரின் பெயரில் கூட்டுப்பட்டாவாக இருந்தது.
இதனால் பூஸ்ட்டி தெரு வழியாக நடைபாதை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து காலனி மக்களின் நடைபாதை பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது.