லாரி டிரைவர் அடித்துக்கொலை: நண்பர்கள் 2 பேர் பழனி கோர்ட்டில் சரண்

லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர்கள் 2 பேர் பழனி கோர்ட்டில் சரணடைந்துள்ளனர்.

Update: 2018-04-23 23:00 GMT
பழனி,

வடமதுரை ஆண்டிமாநகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகன் சந்தனக்குமார் (வயது 27). லாரி டிரைவர். இவருடைய நண்பர்கள் வடமதுரை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (48), ஆண்டிமாநகரை சேர்ந்த துளசிராஜ் (42). சந்தனக்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்படுவதும், அக்கம்பக்கத்தினர் சமாதானப்படுத்துவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வடமதுரை-சிக்காளிபட்டி சாலையில் நரிப்பாறை என்னுமிடத்தில் உள்ள கல்குவாரியின் பின்புறம் முகம், கால்களில் ரத்தக்காயங்களுடன் அவர் பிணமாக கிடந்தார். மேலும் அவர் அடித்துக்கொல்லப்பட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே சந்தனக்குமாரின் தம்பி சீனிவாசன் வடமதுரை போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது அண்ணனை கிருஷ்ணமூர்த்தியும், துளசிராஜூம் தான் அடித்து கொலை செய்திருப்பதாக கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தியும், துளசிராஜூம் நேற்று பழனி கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களிடம் நீதிபதி பிரியா விசாரணை நடத்தினார். அப்போது சந்தனக்குமாரை அடித்து கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து வடமதுரை போலீசாரிடம் அவர்களை ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் வடமதுரை போலீசாரிடம் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்