கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலியாகியுள்ளான். நண்பனை காப்பாற்ற முயன்ற போது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Update: 2018-04-23 22:00 GMT
கொடைரோடு, 

மதுரை மாவட்டம், பாண்டியராஜபுரம் அருகேயுள்ள பெருமாள்பட்டியை சேர்ந்த சஞ்சய் (வயது 15), வாடிப்பட்டியை சேர்ந்த கீர்த்தி (15), திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டியை சேர்ந்த முரளி (15), தாபேஷ் (15), ரோகித் (15) உள்பட 11 பேர் கொடைரோடு அருகேயுள்ள ஜல்லிபட்டி மலை கரட்டில் கல்குவாரிக்கு நேற்று வந்தனர். அங்குள்ள குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் முரளி உள்பட 9 பேர் குளித்தனர். சஞ்சய், ரோகித் ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் கரையோரத்தில் அமர்ந்து இருந்தனர். அப்போது சஞ்சய் தண்ணீரில் இறங்கி கை, கால்களை கழுவியதாக கூறப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக அவன் தண்ணீருக்குள் விழுந்தான்.

உடனே ரோகித் தண்ணீரில் இறங்கி அவனை காப்பாற்ற முயன்றான். அப்போது அவனும் தண்ணீருக்குள் விழுந்தான். இதை கவனித்த உடன் வந்த நண்பர்கள், சஞ்சயை மீட்டனர். ஆனால் ரோகித் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து தகவலறிந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார், நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் வீரர்கள் அங்கு வந்து ரோகித் உடலை மீட்டனர். பின்னர் அவன் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க வந்த 11 பேரும் வாடிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர் என்பது தெரியவந்தது. நண்பனை காப்பாற்ற முயன்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் செய்திகள்