சங்கரன்கோவில் அருகே பெண்ணை தாக்கி சங்கிலி பறிக்க முயற்சி

சங்கரன்கோவில் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை தாக்கி சங்கிலி பறிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2018-04-23 01:48 GMT
சங்கரன்கோவில், 

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள வடகரையை சேர்ந்தவர் சுப்பையா (வயது 60) தொழிலாளி. இவரது மனைவி முருகாம்பாள் (58). கணவன்-மனைவி நேற்று காலையில் சங்கரன்கோவிலில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர் கள் சங்கரன்கோவிலுக்கு வழி கேட்பது போல், முருகாம்பாளின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட முருகாம்பாள் சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டு சத்தம் போட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பையாவும் சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், 2 பேரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

இதில் நிலைதடுமாறிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முருகாம்பாள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்