மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தண்டபாணி ஆய்வு செய்தார்.

Update: 2018-04-23 01:29 GMT
கடலூர்,

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கடலூர் ஊராட்சி ஒன்றியம் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் அம்மா உடற்பயிற்சி நிலையம் மற்றும் ரூ.20 லட்சம் செலவில் அம்மா பூங்கா அமைக்கும் பணியை கலெக்டர் தண்டபாணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து திருவந்திபுரம் அணைக்கட்டை ஆய்வு செய்த கலெக்டர், கெடிலம் ஆற்றின் இருபுறமும் உள்ள கரைப்பகுதி வெள்ளத்தால் பாதிக்காத வகையில் உரிய தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சியில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மா மற்றும் பலா செடிகளையும், ராமாபுரம் ஊராட்சியில் 2 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிகளாய், கத்தரி செடிகளையும் கலெக்டர் தண்டபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வெள்ளக்கரை ஊராட்சி ஒதியடிக்குப்பம் கிராமத்தில் சிப்பம் கட்டும் அறையையும், வழிசோதனைப்பாளையம் ஊராட்சியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் தண்ணீரில், தண்ணீர் மற்றும் மண் ஆகியவற்றை பிரித்து எடுத்து இருமுறை சுத்தம் செய்து சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழையையும் கலெக்டர் தண்டபாணி பார்வையிட்டார்.

இதன் பின்னர் காரைக்காடு கே.புத்தூர் ஊராட்சியில் 1.14 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழையை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர், அங்கிருந்து வேளாண்மைத்துறை சார்பில் காரைக்காடு ஊராட்சியில் சொட்டு நீர் பாசனம் மூலம் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்தராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன், இணை இயக்குனர் (வேளாண்மை) கனகசபை, உதவி இயக்குனர்(வேளாண்மைத்துறை) பூவராகவன், வேளாண்மை அலுவலர் சசிகுமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ராஜாமணி, உதவி இயக்குனர் ராமலிங்கம், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜ், ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ஜோதிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்