மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதல்; மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் பலி

கடலூர் முதுநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார். உறவினர்களுடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்தது.

Update: 2018-04-23 01:24 GMT
கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள ஆலப்பாக்கம் குறவன்மேடு கிராமத்தை சேர்ந்த நாகப்பன் மகன் ரவிக்குமார்(வயது 30). சத்தீஷ்கார் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

இந்த நிலையில் தனது உறவினர் பெண்ணின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ரவிக்குமார் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் கடலூர் பச்சையாங்குப்பத்துக்கு வந்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து இரவு அவரது உறவினர்கள் குணசீலன்(24), சூரியபிரகாஷ்(20) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை ரவிக்குமார் ஓட்டினார்.

செம்மங்குப்பம் தனியார் கம்பெனி அருகே சென்றபோது எதிரே வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த குணசீலன், சூரியபிரகாஷ் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

விபத்து காரணமாக கடலூர்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் விரைந்து வந்து ரவிக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போக்குவரத்தையும் சரிசெய்தனர்.

விபத்து குறித்து ரவிக்குமாரின் தந்தை நாகப்பன் கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் வடலூர் அருகே உள்ள சேப்ளாநத்தத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் தாமரைக்கனி(22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்