6 தொகுதிகளில் வேட்பாளர்கள் மாற்றம் பாதாமியிலும் சித்தராமையா களமிறங்குகிறார்

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 223 இடங்களில் போட்டியிடுகிறது. இதில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மாற்றப்பட்டு புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-04-23 00:14 GMT
சாமுண்டீஸ்வரியை தொடர்ந்து பாதாமியில் சித்தராமையா போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேல்கோட்டையில் மறைந்த விவசாய சங்க தலைவர் புட்டண்ணய்யாவின் மகனுக்கு அக்கட்சி ஆதரவு அளித்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் தங்கள் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி இதுவரை 218 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டது.

இதில் சில தொகுதிகளில் நிறுத்தப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் மீது கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் அதிருப்தியில் இருந்தனர். அதேப் போல் குடகு மாவட்டம் மடிகேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட எச்.எஸ்.சந்திரமவுலி, வங்கி மோசடி வழக்கில் தலைமறைவாகி உள்ள நிரவ்மோடியின் உறவினரின் வக்கீல் ஆவார். மோசடி செய்தவரின் வக்கீலை தேர்தலில் காங்கிரஸ் நிறுத்தி இருப்பதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. அதேப் போல் முதல்-மந்திரி சித்த ராமையா பாதாமி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகூல் வாஸ்னிக் நேற்று காங்கிரஸ் கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மாற்றம் செய்து காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அதாவது, பாதாமி தொகுதியில் டாக்டர் தேவராஜ் பட்டீலுக்கு மாற்றாக முதல்-மந்திரி சித்தராமையா, ஜகலூர் தொகுதியில் ஏ.எல்.புஷ்பாவுக்கு பதிலாக எச்.பி.ராஜேஷ், திப்தூர் தொகுதியில் பி.நஞ்சமாரிக்கு மாற்றாக தற்போதைய எம்.எல்.ஏ. கே.சடாக்‌ஷரி, மல்லேசுவரம் தொகுதியில் மந்திரி எம்.ஆர்.சீதாராமிற்கு பதிலாக கெங்கல் ஸ்ரீபட ரேணு, பத்மநாபநகர் தொகுதியில் பி.குருப்ப நாயுடுவுக்கு மாற்றாக எம்.சீனிவாஸ், மடிகேரி தொகுதியில் எச்.எஸ்.சந்திர மவுலிக்கு பதிலாக கே.பி.சந்திரகலா போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மல்லேசுவரம் தொகுதியில் போட்டியிடும் கெங்கல் ஸ்ரீபட ரேணு, முன்னாள் முதல்-மந்திரி கெங்கல் ஹனுமந்தய்யாவின் பேரன் ஆவார். முதல்-மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி, பாதாமி என இரு தொகுதிகளில் வருகிற தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது உறுதி ஆகியுள்ளது.

மேலும் ஏற்கனவே 6 தொகுதிகளுக்கு அக்கட்சி வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. இதில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதாவது கித்தூரில் டாக்டர் பி.இனம்தார், நாகடானாவில் விட்டல் தொண்டிப கட்டக்தொண்ட், சிந்த கியில் மல்லண்ணா நிக்கண்ணா சாலி, ராய்ச்சூரில் சையது யாசின், சாந்திநகரில் என்.ஏ.ஹாரீஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

சாந்திநகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள என்.ஏ.ஹாரீஸ், அந்த தொகுதியில் கடந்த 2008 மற்றும் 2013-ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். சமீபத்தில் ஹாரீஸ் எம்.எல்.ஏ.வின் மகன் முகமது நலபட், தொழில் அதிபரின் மகனை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் ஹாரீசுக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு நேற்று காங்கிரஸ் கட்சி விடையளிக்கும் வகையில் சாந்திநகர் தொகுதி வேட்பாளராக ஹாரீசை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கித்தூர் தொகுதியில் 5 தடவை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உள்ள இனம்தார் மீண்டும் அங்கு களமிறக்கப்பட்டுள்ளார் என்பது நினைவுக்கூரத்தக்கது. அதேப் போல் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த எம்.சீனிவாசுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மண்டியா மாவட்டம் மேல்கோட்டை தொகுதியில் 2013-ம் ஆண்டு தேர்தலில் கர்நாடக சர்வோதயா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், விவசாய சங்கத் தலைவரான புட்டண்ணய்யா. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 18-ந்தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். வருகிற தேர்தலில் இந்த தொகுதியில் புட்டண்ணய்யாவின் மகன் தர்ஷன் புட்டண்ணய்யா சுவராஜ் இந்தியா கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அங்கு காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் ஆதரவு தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு கிடைக்கும் என்ற நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி மேல்கோட்டையில் வேட்பாளரை நிறுத்தவில்லை என்று தகவல் வெளியாகி யுள்ளது. 

மேலும் செய்திகள்