தமிழகத்தில் கும்பாபிஷேகம் நடத்தாத கோவில்களில் விரைவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன்

கும்பாபிஷேகம் நடத்தாத கோவில்களில் விரைவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரித்தார்.

Update: 2018-04-22 23:31 GMT
சேலம்,

தமிழகத்தில் கும்பாபிஷேகம் நடத்தாத கோவில்களில் விரைவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆகம விதிப்படி 12 ஆண்களுக்கு ஒருமுறை கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில், பக்தர்கள் வழங்கிய ரூ.32 லட்சத்து 50 ஆயிரம் மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கும்பாபிஷேகம் நடத்தப்படாத கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷகம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் சுகவனேசுவரர் கோவில் யானை ராஜேஸ்வரிக்கு கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் உரிய சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து யானையின் உடல்நிலை குறித்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இயற்கையான முறையில் தான் அந்த யானை இறந்தது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

சேலம் சுகவனேசுவரர் கோவில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்துவிட்டதால், சேலம் மண்டலத்தில் உள்ள கோவில்களில் தற்போது ஒன்றில் கூட யானை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரனிடம் கேள்வி கேட்டபோது, சேலம் மண்டலத்திற்கு புதிதாக யானை கொண்டு வரும் வகையில், இந்த விஷயம் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அதுமட்டுமின்றி தமிழகத்தில் யானை இல்லாத கோவில்களில் யானையை கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

மேலும் செய்திகள்