தமிழகம் முழுவதும் விரைவில் 817 கால்நடைமருத்துவர்கள் நியமனம் அமைச்சர் தகவல்

தமிழகம் முழுவதும் விரைவில் 817 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று, வேதாரண்யத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-04-22 22:45 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் கால்நடை மருந்தகம் கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு இதன் தொடக்க விழா நடைபெற்றது.

விழாவுக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். விழாவில் கலெக்டர் சுரேஷ்குமார், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், கால்நடைத்துறை மண்டல இயக்குனர் தமிழ்செல்வன், கோபால் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், பாரதி, ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், ஒன்றிய செயலாளர் கிரிதரன், நகர செயலாளர் எழிலரசு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட 5 கால்நடை மருத்துவமனைகளில் வேதாரண்யம் கால்நடை மருத்துவமனையும் ஒன்று. கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பற்றாக்குறையை போக்க தமிழகம் முழுவதும் விரைவில் 817 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் 22 கால்நடை மருத்துவமனைகளுக்கு லிப்ட் வசதியுடன் கூடிய ஆம்புலன்சுகள் வழங்கப்பட உள்ளது. அதில் வேதாரண்யம் கால்நடை மருத்துவமனைக்கும் ஒரு ஆம்புலன்ஸ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் 844 பயனாளிகளுக்கு ஆடுகள் மற்றும் விவசாய கருவிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார். முடிவில் கால்நடை மருத்துவர் ராஜேந்திரன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்