திருச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 420 வழக்குகளுக்கு தீர்வு

திருச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 420 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன்மூலம் உரியவர்களுக்கு ரூ.5 கோடியே 68 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

Update: 2018-04-22 22:30 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடி, துறையூர் ஆகிய 7 நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதனை திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான குமரகுரு தொடங்கி வைத்தார்.

திருச்சி நீதிமன்றத்தில் 7 மக்கள் நீதிமன்ற அமர்வுகளும், துறையூரில் 3 அமர்வுகளும், மணப்பாறை, முசிறி ஆகியவற்றில் தலா 2 அமர்வுகளும், லால்குடியில் 1 அமர்வும் என மொத்தம் 15 அமர்வுகளில் உரிமையியல் வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள் மோட்டார் வாகன வழக்குகள் நஷ்ட ஈடு வழக்குகள், வங்கி வழக்குகள் என நிலுவையில் உள்ள 11 ஆயிரத்து 74 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 420 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.5 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரத்து 705 இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டது. இதில் மோட்டார் வாகன வழக்குகள் நஷ்ட ஈடு வழக்குகளில் அதிகபட்சமாக ரூ.2 கோடியே 66 லட்சத்து 725 இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகள்

இதில் திருச்சி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி சுப்ரமணியன், அனைத்து மாவட்ட நீதிபதிகளும், ஏனைய நீதிபதிகளும் மற்றும் வக்கீல்களும், அனைத்து சங்க நிர்வாகிகளும், காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும், வங்கி அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மேற்படி திருச்சி முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான கீதா செய்திருந்தார்.

மேலும் செய்திகள்