போலீசாரை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேட்டி

போலீசாரை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-04-22 22:15 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சமூக நலத்துறை மற்றும் வருவாய்துறையின் சார்பாக தாலிக்கு தங்கம் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குதல், மின்னணு குடும்ப அட்டைகள் மற்றும் பட்டா மாறுதல் வழங்குதல் என 385 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 74 ஆயிரத்து 790 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

இதில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் யானை வயது முதிர்வு காரணமாக இறந்தது. அடுத்த 2 மாதங்களில் அனைத்து கால்நடைகள் பயன்பெறும் வகையில், லிப்ட் வசதியுடன் புதிதாக இலவச அம்மா மெடிக்கல் ஆம்புலன்ஸ் வசதியை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கிவைப்பார். மருத்துவ குழுவுடன் கால்நடைகள் இடத்திற்கே சென்று சிகிச்சை அளிக்கப்படும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரும்பு கரம் மூலம் ஆட்சியை எப்படி நிலை நாட்டினாரோ, அந்த வழியில் இந்த ஆட்சியும் செயல்படும். தமிழகத்தில் போலீசாரை தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்