காஷ்மீர் சிறுமி கொலையை கண்டித்து கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காஷ்மீர் சிறுமி கொலையை கண்டித்து கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2018-04-22 23:00 GMT
கோவை,

காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, கோவை ஆத்துப்பாலத்தில் நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கிணத்துக்கடவு பகுதி செயலாளர் ஏ.ஹாரூண் ரஷீத் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் அப்துல்பசீர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் எம்.எச்.அப்பாஸ், பொருளாளர் டி.எம்.எஸ். அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

சிறுமி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களின் உருவபொம்மைகளை ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் தூக்கில் தொங்கவிட்டு இருந் தனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உருவப்படத்தை கைகளில் ஏந்தி ஊர்வலமாகவும் வந்தனர்.

சிறுமியை கொன்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். தடையை மீறி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இரவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

மேலும் செய்திகள்