கோவையில் கம்பிகளை வளைத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு 2 ஆண்டுகளாக சுற்றித்திரிந்த ஆசாமி

கோவையில் கம்பிகளை வளைத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு 2 ஆண்டுகளாக சுற்றித்திரிந்த ஆசாமி மீட்கப்பட்டார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Update: 2018-04-22 22:45 GMT
கோவை,

கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் ஒய்ஸ்மென் கிளப் இணைந்து கோவையில் தெருக்களில் சுற்றித்திரியும் ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதித்தவர்களை மீட்டு முடிதிருத்தம் செய்து காப்பகத்தில் சேர்ப்பது வழக்கம். அதன்படி நேற்று அந்த அமைப்பினர் கோவையின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்தவர்களை மீட்கும் வேலையில் ஈடுபட்டனர்.

அப்போது கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட அந்தோணி (வயது 40) என்பவர் நின்று கொண்டு இருந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கழுத்து, இடுப்பு, கால்களில் இரும்பு கம்பிகளை வளைத்து மாட்டியிருந்தார். அவை கழுத்தை இறுக்கி காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வடிந்தன.

அவரது கழுத்து மற்றும் உடலில் சுற்றியிருந்த இரும்பு கம்பிகளை மிகுந்த சிரமத்திற்கு இடையில் வெட்டி எடுத்து அகற்றப்பட்டது. அப்போது அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து அவரை உடனடியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் அவர் கோவை புலியகுளம் பகுதியில் தனது வீடு இருப்பதாக கூறினார். ஆனால் முகவரியை சரியாக கூறத்தெரியவில்லை. உடனே ஈரநெஞ்சம் அறக்கட்டளையினர் அவரை புலியகுளம் பகுதிக்கு அழைத்து சென்றனர். அந்த பகுதியில் அவரை பார்த்த சிலர் அவரது வீட்டை அடையாளம் காட்டினார்கள். இதைத்தொடர்ந்து அந்தோணியை குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அந்தோணியை மீட்ட ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிர்வாகி மகேந்திரன் கூறியதாவது:-

மீட்கப்பட்ட அந்தோணி உடற்பயிற்சி செய்யும்போது அவரது தலையில் இரும்பு கம்பி பட்டு மூளையில் கோளாறு ஏற்பட்டது. அதன்பின்னர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டார். அதன்பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய அந்தோணி எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவரது குடும்பத்தினரும் தேடி வந்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் சாலையில் இரும்பு கம்பி கிடப்பதை பார்த்தால் உடனே அதை எடுத்து தனது கழுத்து, வயிறு, கால்களில் சுற்றி வைத்துள்ளார். 2 ஆண்டுகளாக அவர் இப்படி கம்பியை சுற்றி சுற்றி அவை உடலில் அழுத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. அவற்றை மிகுந்த சிரமத்துடன் வெட்டி எடுத்தோம். மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்டு குடும்பத்தினருடன் சேர்த்தது மனநிறைவை தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்