பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: கவர்னர் பதவி விலக வேண்டும், முத்தரசன் வலியுறுத்தல்

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பதவி விலக வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2018-04-22 22:45 GMT
சிவகாசி,

சிவகாசியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றார் என்பது குறித்த அவரது உரையாடல் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. நிர்மலாதேவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாநில அரசு ஒரு விசாரணையை மேற்கொள்கிறது. கவர்னர் ஒரு விசாரணையை மேற்கொள்கிறார். 2 விசாரணையும் ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து கவர்னர் ஒரு விசாரணையை மேற்கொள்கிறார். மாநில அரசு காவல்துறை மூலமாக விசாரணையை மேற்கொள்கிறது.

கவர்னர் அவசர, அவசரமாக ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏன் ஏற்பட்டது. நிருபர்களை அழைத்து தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் என்ன. இவையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பக்கூடிய கேள்விகள் ஆகும். இந்த கேள்விகளுக்கு எல்லாம் உண்மையில் விடை காண வேண்டும். இதில் அந்த பேராசிரியை மட்டும் குற்றவாளி அல்ல. ஏதோ ஒன்றுக்கு ஆசைப்பட்டு இந்த செயலில் அவர் ஈடுபட்டு இருக்கிறார். பதவி அல்லது பணத்துக்கு கூட ஆசைப்பட்டு இருக்கலாம்.

அவரை இந்த செயலை செய்ய வற்புறுத்தியது யார் தூண்டியது யார் அந்த பெரியமனிதர்கள் யார் என்பது தான் இன்றைக்கு இருக்கக்கூடிய முக்கிய கேள்வி ஆகும். உண்மை வெளிவர வேண்டும் என்றால் பணியில் இருக்கிற உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியை கொண்டு ஒரு முழு விசாரணை நடத்த வேண்டும். கவர்னர் அவரது பதவிக்கு உரிய கவுரவத்தை காப்பாற்ற, உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி அவரை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, தாலுகா செயலாளர் ஜீவா, தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் உதயசூரியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சதுரகிரி ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்