மாசவநத்தம் பகுதியில் குண்டாறு, தரிசு நிலங்களில் மணல் கொள்ளை; கிராம மக்கள் புகார்

மாசவநத்தம் பகுதியில் குண்டாறு, தரிசு நிலங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாக, அந்த பகுதி கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2018-04-22 22:00 GMT
திருமங்கலம்,

சாப்டூர் மலை பகுதிகளில் பெய்யும் மழை, ஓடைகள் மூலம் திரளி, ஆலம்பட்டி மற்றும் டி.புதுப்பட்டி வழியாக திருமங்கலம் தாலுகா சிவரக்கோட்டை அருகே சென்று கமண்டல ஆறு என உருவாகி, திருச்சுழி அருகே குண்டாற்றில் சேருகிறது. இந்த ஆறு பழமைவாய்ந்த ஆறு என்று கூறப்படுகிறது. இந்த ஆறு வழியில் சென்னம்பட்டி, குராயூர் மாசவநத்தம் வழியே செல்கிறது. இந்த ஆற்று பகுதியை ஒட்டி உள்ள நிலங்களில் 40 ஆண்டுகளுக்கு முன்பு, ஆற்றோரம் கிணறு போல சிறிய குழி தோண்டி அதில் ஊரும் ஆற்றுநீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்தனர்.

 காலபோக்கில் சரியான மழை பெய்யாததால், ஓடைகள் காய்ந்தும், ஆறுகள் நீரின்றி வறண்டதால், ஆற்று ஓரமுள்ள நிலங்களில் விவசாயம் நடைபெறவில்லை. இதனால் நிலங்கள் தரிசாகி முட்புதராகி விட்டது. மாசவநத்தம், மற்றும் அதையொட்டி உள்ள கிராம நிலங்களை ஆந்திராவை சேர்ந்தவர்கள் விலைக்கு வாங்கியும், அதை பயன்படுத்தாமல் இருப்பதால் தரிசாகி கிடக்கிறது. இந்த நிலங்களிலும், அதையொட்டி உள்ள மாசவநத்தம் குண்டாற்று பகுதியிலும் அதிக அளவில் மணல் உள்ளது.

இந்த பகுதிகளில் மணல் அள்ள அரசு தடைவிதித்துள்ளது. இதனால் இந்த பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கான மணல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மாசவநத்தம் பகுதியில் உள்ள தரிசு நிலங்கள், குண்டாற்றில் இரவோடு, இரவாக மணல் திருடப்படுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

இதுபற்றி அந்த பகுதி மக்கள் கூறும் போது, ஆறு மற்றும் அதன் ஓரப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் 4 அடிக்கு கீழ் மணல் இருப்பதை தெரிந்து கொண்டு, ஜேசிபி எந்திரம் மூலம் மணலை எடுத்து செல்லப்படுகிறது. இதை தடுக்க இரவு தலையாரிகள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் தலையாரிகள் இல்லாத நேரத்தை தெரிந்து கொண்டு சிலை மணலை லாரிகளில் அள்ளி செல்கின்றனர்.

இந்த மணல் கொள்ளையை கிராம மக்களாகிய எங்களால் தடுக்க முடியவில்லை என்று கூறுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசவநத்தம் வழியாக வருவாய்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது மணல் ஏற்றி வந்த விருதுநகர் பகுதியை சேர்ந்த லாரியை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்