குமரி மாவட்ட கோர்ட்டுகளில் ‘லோக் அதாலத்’ 714 வழக்குகளுக்கு தீர்வு

குமரி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நேற்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 714 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2018-04-22 22:45 GMT
நாகர்கோவில்,

கோர்ட்டுகளில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்கும் பொருட்டு 2 மாதங்களுக்கு ஒருமுறை நாடு முழுவதும் கோர்ட்டுகளில் ‘லோக் அதாலத்‘ நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் நேற்று ‘லோக் அதாலத்‘ நிகழ்ச்சி நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், இரணியல், பூதப்பாண்டி, குழித்துறை, பத்மநாபபுரம் ஆகிய கோர்ட்டுகளில் ‘லோக் அதாலத்‘ நடந்தது.

நாகர்கோவில் கோர்ட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட நீதிபதி கருப்பையா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில், மகிளா கோர்ட்டு நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம், முதன்மை மாவட்ட குற்றவியல் நீதிபதி முருகானந்தம், சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாவட்டம் முழுவதும் கோர்ட்டில் நிலுவையில் உள்ள சிறு, சிறு குற்ற வழக்குகள், விபத்து வழக்குகள், காப்பீட்டு வழக்குகள், வங்கி தொடர்பான வழக்குகள், செக் மோசடி வழக்குகள், குடும்ப நல வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மொத்தம் 8 ஆயிரத்து 628 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில், 714 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ரூ.5 கோடியே 29 லட்சத்து 73 ஆயிரத்து 462–க்கு தீர்வு ஏற்பட்டது. ‘லோக் அதாலத்‘ நிகழ்ச்சியில், நாகர்கோவில் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களில் 2 தம்பதியினர் சேர்ந்து வாழ விரும்புவதாக விருப்பம் தெரிவித்து வழக்கை நேற்று வாபஸ் பெற்றனர். அரசு போக்குவரத்துகழக தொடர்பான வழக்குகளில் 10 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், முதலாவது கூடுதல் சார்பு நீதிபதி அமிர்தவேலு, முதன்மை சார்பு நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரெத்னா, 2–வது கூடுதல் சார்பு நீதிபதி சுதாகர், நீதித்துறை நடுவர் ராஜா எஸ்.ரம்யா, மாஜிஸ்திரேட்டு பாரததேவி மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் முகமது இசாத்அலி, சுந்தர நாடார், சேவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்