முதுமை முடிவல்ல.. தொடக்கம்..

ஓய்வு காலத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளை சுற்றுலா வாகனமாக மாற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது ஒரு முதிய ஜோடி.

Update: 2018-04-22 07:33 GMT
ய்வு காலத்திற்கு பிறகு இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளை சுற்றுலா வாகனமாக மாற்றி வலம் வந்து கொண்டிருக்கிறது ஒரு முதிய ஜோடி. அவர்கள் பெயர் திலீப் சவுகான்- பூஜா. 61 வயதாகும் திலீப் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பூஜாவுக்கு 57 வயது. இருவரும் இளமை காலத்தில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்திருக் கிறார்கள். ஆனால் பணி நிமித்தமும், குடும்ப சூழ்நிலையும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. தற்போது ஓய்வு கால பொழுதை சுற்றுலா மூலம் கழிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுற்றுலா பயணத்தை தொடங்கியவர்கள் 150 நாட்களில் 5,500 கிலோ மீட்டர் தூரம் பயணித்திருக்கிறார்கள். லே முதல் ஆக்ரா வரையிலான இடைப்பட்ட பகுதியில் அமைந் திருக்கும் சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்திருக்கிறார்கள்.

இந்தூரில் வசிக்கும் இந்த முதிய தம்பதியருக்கு 34 வயதில் மகள் இருக்கிறார். அவருக்கு திருமணமாகிவிட்டது. இவர்களுடைய ஒரே மகன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். வீட்டில் தனிமையில் வசிக்கும் சூழல் நிலவியதால் சுற்றுலாவை ரசிக்க கிளம்பி விட்டார்கள்.

‘‘ஓய்வு காலத்திற்கு பிறகும் வாழ்க்கை இருக்கிறது என்பதை இளம் தலைமுறைக்கு புரிய வைக்க வேண்டும். அதனைதான் எங்கள் பயணத்தின் நோக்கமாக கொண்டிருக்கிறோம்’’ என்கிறார், திலீப்.

வங்கி பணியில் ஓய்வு பெறுவதற்கான காலம் நெருங்க தொடங்கியதுமே திலீப் மனைவியுடன் சுற்றுலா செல்வதற்கான பயண திட்டத்தை வகுக்க தொடங்கியிருக்கிறார். பயணத்திற்கு தயாராகுவதற்காக காலையிலும் மாலையிலும் நீண்ட தூரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். ஜாக்கிங் பயிற்சியும் பெற்றிருக்கிறார்கள். வெளி இடங்களுக்கு ஏற்றவாறு உணவு பழக்கவழக்கங்களிலும் கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்திருக்கிறார்கள். மேலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் இருவரும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். நீண்ட தூரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதற்கு ஏற்ப உடல் எடை குறைப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.

‘‘வயதின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படலாம். ஆனால் மனம் ஒருபோதும் தளர்வடையக்கூடாது. அதற்கேற்ப உடலில் ஏற்படும் சவால்களை சமாளிக்க மனதை பலப்படுத்திக்கொண்டோம். வாழ்க்கை என்பது ஒருமுறை மட்டுமே வாழ்வது. நிச்சயமற்ற தன்மை கொண்டது. இறுதிகாலத்திலாவது இந்த பிரபஞ்சத்தின் பன்முகத்தன்மையை ஆராய்வதற்கு ஆர்வமாக இருந்தோம்’’ என்கிறார்கள், இந்த தம்பதியர்.

இவர்களின் பயணம் சுமுகமாக தொடரவில்லை. ஆக்ரா அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந் திருக்கிறார்கள். அதில் இருந்து மீண்டு வர நான்கு மாதங்கள் ஆகி இருக்கிறது. விபத்தால் உடல் சோர்ந்து போனாலும் மனம் சோர்வடையாமல் விபத்தில் சிக்கிய இடத்தில் இருந்தே மீண்டும் பயணத்தைதொடங்கி இருக்கிறார்கள். இவர் களது பயணத்திற்கு இருசக்கர வாகன ‘கிளப்’கள் உறு துணையாக இருக்கின்றன. அவர்கள் மூலம் செல்லும் பகுதியில் தங்குமிடம், உணவு போன்ற தேவை களுக்கு சுலபமாக ஏற்பாடு செய்து கொள்கிறார்கள்.

‘‘எங்கள் பயணத்தில் இமயமலை பகுதிக்கு சென்றடைந்ததுதான் சவாலானது. மழை, பனி, காற்று குளிர், ஜீரோ டிகிரி வெப்பநிலை போன்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருந்தது. எனினும் உள்ளூர் மக்களின் ஆதரவும், அவர் களின் கலாசாரமும் எங் களுக்கு உத்வேகத்தை கொடுத்தது. இந்த பயணங்களின் மூலம் இந்தியாவின் முற்றிலும் வேறுபட்ட பக்கங்களை பார்க்க முடிகிறது. கலாசார பன்முகத்தன்மையை ஆராய முடிகிறது. ஸ்ரீநகரில் ஒரு முஸ்லிம் குடும்பத்தினருடன் தங்கியிருந்து உள்ளூர் விழாவை கொண்டாடினோம். தர்மசாலாவில் ஒரு நேபாள குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தோம்’’ என்கிறார், பூஜா.

இந்த தம்பதியினர் தினமும் சரா சரியாக 300 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்கிறார்கள். அதிகபட்சமாக ஒரே நாளில் 480 கிலோ மீட்டர் பயணித்திருக்கிறார்கள். பினோகர் முதல் அமிர்தசரஸ் இடையிலான தூரத்தை 14 மணி நேரத்தில் கடந்திருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்குள்ள சிறப்பம்சங்களை அறிய வேண்டும் என்பது இந்த தம்பதியரின் விருப்பமாக இருக்கிறது. அதற்கேற்ப தங்கள் பயணங்களை திட்டமிட்டு செயல் படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்