மராட்டிய சட்ட மேலவையின் 6 தொகுதிகளுக்கு மே 21-ந் தேதி தேர்தல்

மராட்டிய சட்ட மேலவையின் 6 தொகுதிகளுக்கு வருகிற மே மாதம் 21-ந் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

Update: 2018-04-21 23:44 GMT
மும்பை,

மராட்டிய சட்டமேலவைக்கு உள்ளாட்சி அமைப்பு தொகுதிகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் (எம்.எல்.சி.) பதவி காலம் நிறைவு பெற உள்ளன. இதில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த உறுப்பினர் அனில் தத்காரேயின் (ராய்காட்-ரத்னகரி-சிந்துதுர்க் தொகுதி) பதவிக்காலம் வருகிற மே மாதம் 31-ந் தேதி நிறைவு பெறுகிறது. மேலும் இதே கட்சியை சேர்ந்த மேலவை உறுப்பினர்கள் ஜெயந்த் ஜாதவ் (நாசிக்), லத்திப் கான் துரானி (பர்பானி-ஹிங்கோலி), காங்கிரஸ் உறுப்பினர் திலிப் தேஷ்முக் (உஸ்மனாபாத்-லாத்தூர்-பீட்) மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் பிரவீன் போடே (அமராவதி), மித்தேஷ் பங்தியா (வார்தா-சந்திராப்பூர்-கட்சிரோலி) ஆகியோரின் பதவிக்காலம் வருகிற ஜூன் 21-ந் தேதி நிறைவு பெறுகிறது.

இந்தநிலையில் காலியாக உள்ள இந்த 6 தொகுதிகளுக்கும் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் (மே) 21-ந் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

அதன்படி காலியான 6 தொகுதிகளுக்கம் வேட்பு மனு தாக்கல் வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு மே 3-ந் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து மே 21-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, மே 24-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலில் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் அடங்கிய உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகள் வாக்களிக்க உள்ளனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உஸ்மனாபாத்-லாத்தூர்-பீட் தொகுதியில் திலிப் தேஷ்முக் போட்டியிடாவிட்டால் அந்த தொகுதியை தங்களுக்கு விட்டுத்தருமாறு காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்