பொதுகுழாய் இணைப்பை மீண்டும் வழங்கக்கோரி அதிகாரிகள் வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடிப்பு

குடியாத்தத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பகுதியில் குடிநீர் தொட்டி சுத்தம் செய்வதற்கு வசதியாக பொது குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Update: 2018-04-21 22:22 GMT
குடியாத்தம்,

துண்டிக்கப்பட்ட இணைப்புகளை மீண்டும் வழங்கக்கோரி அதிகாரிகளின் வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம் செதுக்கரை கொண்டசமுத்திரம் ஊராட்சி ஜீவாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ‘திடீர்’ வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில் கலெக்டர் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்பேரில் திருப்பத்தூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் தேவபார்த்தசாரதி, தாசில்தார் பி.எஸ்.கோபி, நகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, பொறியாளர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் ரகு, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வி.ராமு, வட்டார மருத்துவ அலுவலர் விமல் உள்ளிட்டோர் ஜீவாநகர் பகுதியில் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்பார்வையிட்டனர்.

அதன்படி 6 டாக்டர்கள் உள்பட 40 சுகாதார பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அப்பகுதியில் உள்ள 350 வீடுகளில் வசிப்பவர்களுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மாத்திரைகளை வழங்கினர். மேலும் அப்பகுதியில் முழுசுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

ஜீவாநகர் பகுதியில் நகராட்சி குடிநீர் தொட்டியில் இருந்து பெரும்பான்மையான நகர வார்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் தொட்டியில் இருந்து ஜீவாநகர் பகுதிக்கு 4 குடிநீர் பொதுகுழாய் இணைப்புகள் உள்ளன. வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டவுடன் உயர்அதிகாரிகள் உத்தரவின்பேரில் அந்த தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.

அப்போது அந்த 4 குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு அதில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடனடியாக குழாய் இணைப்பு மீண்டும் வழங்க வேண்டும் என கோரி நகராட்சி பொக்லைன் எந்திரம் மற்றும் சுகாதார அலுவலர்கள் சென்ற வாகனங்களை சிறைப்பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் தொட்டி சுத்தம் செய்த பின்னர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்காமல் தங்களுக்கு உடனடியாக பொது குழாய் இணைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்