அலங்காநல்லூர் பகுதியில் கடும் வறட்சி தென்னைமரங்கள் வெட்டி அழிப்பு; விவசாயிகள் கவலை

அலங்காநல்லூர் பகுதியில் கடும் வறட்சியால் தென்னைமரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.

Update: 2018-04-21 21:45 GMT
அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் கடந்த சில வருடங்களாக பருவ காலங்களில் பெய்ய வேண்டிய மழை பொய்த்து போனது. அவ்வப்போது பெய்த சாரல் மழையால், பூமிக்கான ஈரப்பதம் இல்லாமல் வறண்டு போனது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியதையொட்டி வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 மேலும் கண்மாய், குளங்கள் வறண்ட நிலை நீடித்து காணப்படுவதால், இந்த பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிணறுகள் தண்ணீரில்லாமல் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. இந்தநிலை தொடர்ந்து நீடித்துள்ளதால் தென்னைமரங்களை விவசாயிகள் காப்பாற்ற முடியாமல், தோப்பு முழுவதும் உள்ள மரங்களில் மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மரங்களும் பட்டுப் போய்விட்டன. இதையொட்டி ஏராளமான தென்னை மரங்கள் வெட்டி அழிக்கப்படுகின்றன. இதனால் தோட்டங்கள் காலி நிலங்களாக காணப்படுகிறது. மானாவாரி பயிர்களும் முற்றிலும் விளைச்சல் இல்லாமல் போனது.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:– காலத்திற்கேற்ற பருவமழை பெய்யாமல் பொய்த்து போனதால், மக்களுக்கு தேவையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளுக்கும் போதிய நீர் இல்லை. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 மேலும் மா, தென்னை, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பணப்பயிர்கள் வறட்சியின் காரணத்தினால் வாடி வதங்கிய நிலையில் காணப்படுகிறது. தென்னை மரங்கள் மகசூல் பாதிக்கப்பட்டதால், தேங்காய் விலையும் நாளுக்கு நாள் விலை உயர்ந்து வருகிறது. வறட்சியின் காரணமாக தென்னமரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த பகுதி விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்