பழுதான பஸ்களை இயக்குவதாக கூறி கிராம மக்கள் சாலை மறியல்

திண்டுக்கல்லில் இருந்து ஆடலூருக்கு பழுதான அரசு பஸ்கள் இயக்கப்படுவதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-04-21 22:30 GMT
கன்னிவாடி, 

திண்டுக்கல்லில் இருந்து சோலைக்காடு சென்ற அரசு பஸ், கடந்த 15-ந் தேதி மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியானார். இந்த விபத்தில் 72 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆடலூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ் பள்ளக்காடு பகுதியில் மலைப்பாதையில் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து ஆடலூர், பன்றிமலைக்கு திண்டுக்கல்லில் இருந்து பழுதான பஸ்கள் இயக்கப்படுவதை கண்டித்து பழைய கன்னிவாடி, கரிசல்பட்டி, தருமத்துப்பட்டி, அழகுமடை, பன்றிமலை, சோலைக் காடு, ஆடலூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் செம்பட்டி-ஒட்டன்சத்திரம் சாலைக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள், தருமத்துப்பட்டி பிரிவில் ஆடலூர், பன்றிமலைக்கு சென்ற 2 அரசு பஸ்களை சிறைப்பிடித்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி போலீசார், அங்கு விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மலைப்பாதையில் பழுதான பஸ்களை இயக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் போக்குவரத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர்.

இதை தொடர்ந்து திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் கோபாலகிருஷ்ணன், கிளை மேலாளர் ஜெகநாதன், கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மலைப்பாதையில் புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்