ஆராய்ச்சியில் மருத்துவ மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் - கவர்னர் கிரண்பெடி அறிவுரை

மருத்துவ மாணவர்கள் மருத்துவ ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுரை கூறினார்.

Update: 2018-04-21 23:30 GMT
புதுச்சேரி,

புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சர்வதேச இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான மாநாடு நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. 2-வது நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் கிரண்பெடி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மருத்துவர்கள் நோயாளிகளை இன்முகத்தோடு வரவேற்று கனிவாக நடந்து கொள்ள வேண்டும். நோயாளிகளிடம் எந்தெந்த பிரிவில் நிபுணத்துவம் பெற்றவர் என்பதை தெரிவித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் எனக்கு இந்த மருத்துவர் சிகிச்சை அளித்தார் என்று கூறி பெருமையாக பேசுவர். தற்போது ஏற்பட்டு வரும் வளர்ச்சிக்கு ஏற்ப மருத்துவர்கள் நவீன சிகிச்சை முறை, நவீன மருந்துகள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவ மாணவர்கள் மருத்துவ ஆராய்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தி நாட்டின் சுகாதார மேம்பாட்டில் பங்குபெற வேண்டும். நான் காவல்துறையில் பணியாற்றியுள்ளேன். ஆனால் என்னை அனைவரும் சந்தித்தது இ்ல்லை. அனைவருக்கும் நான் தேவைப்பட்டதும் இல்லை. மருத்துவர்கள் மட்டுமே அனைத்து தரப்பு மக்களுக்கும், எல்லா நேரத்திலும் தேவைப்படுவர். ஒவ்வொரு மருத்துவரும் நாட்டு மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள். தற்போது நாட்டின் மக்கள் தொகை 130 கோடியாக உள்ளது. விரைவில் 140 கோடியாக உயரும்.

நமது நாட்டிற்கு அதிக மருத்துவமனைகள், மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். மருத்துவர்களின் நோக்கம் ஆராய்ச்சி தான். தங்களது பிரிவில் சிறந்த சிகிச்சை முறையை தெரிந்து கொள்ள வேண்டும். நோய்கள் வந்த பின்னர் மருந்து அளித்து குணப்படுத்துவதைவிட, நோய் வரவிடாமல் தடுப்பதே சிறந்தது. ஒரு மனிதனின் பணத்தேவைக்கு அளவு உள்ளது. ஆனால் மனிதாபிமான சேவைக்கு அளவு இல்லை. எனவே நீங்கள் மனிதாபிமானத்துடன் சிகிச்சை அளித்தால் நோயாளிகள் உங்களை வாழ்த்துவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்