ரங்கசாமியின் கபட நாடகம் மக்களிடம் எடுபடாது - முதல்-அமைச்சர் நாராயணசாமி பாய்ச்சல்

எதையும் உரிய காலத்தில் செய்யாத ரங்கசாமியின் கபட நாடகம் மக்களிடம் எடுபடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-04-21 23:15 GMT
புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைக்க வலியுறுத்தி காங்கிரஸ், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் புதுவையில் நாளை (திங்கட்கிழமை) மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் அண்ணா சிலையில் தொடங்கி காமராஜர் சிலை, நேரு வீதி, மிஷன் வீதி வரை நடைபெற உள்ளது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகள், அனைத்து கட்சியினர், தன்னார்வ அமைப்பினர், திரைப்படத் துறையினர் ஒருங்கிணைந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு செவிசாய்க்காமல் காலம் தாழ்த்துவது வேதனைக்குரியது.

இதுவரை வாய்மூடி மவுனமாக இருந்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி சில நாட்களுக்கு முன்பு காரைக்காலில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வோம் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும்போது சட்ட சபையில் அவர் இல்லை.

அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தின்போதும் வாய் திறக்கவில்லை. இதுபோல் ஏதும் செய்யாமல் கும்பகர்ண தூக்கத்தில் இருந்த ரங்கசாமி திடீரென எழுந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளார்.

இதில் காரைக்கால் விவசாயிகள் யாரும் பங்கேற்காததால் புதுச்சேரியில் இருந்து ஆட்களை அழைத்துச் சென்றுள்ளார். அவரது கபட நாடகம் மக்களிடம் எடுபடாது. மத்திய அரசுக்கு மாநில அரசு சரியான அழுத்தம் தரவில்லை என்றும் பொய்யான தகவலை கூறியுள்ளார்.

உரியகாலத்தில் எதையும் செய்யாத ரங்கசாமியின் கபட நாடகங்களை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் என்ன நடவடிக்கை எடுத்தனர்? என்.ஆர். காங்கிரஸ் என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை ரங்கசாமி கூற வேண்டும்.

புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. நூதன திருட்டும் அதிகரித்துள்ளது. படித்த என்ஜினீயர்கள் பயிற்சி பெற்று விஞ்ஞான ரீதியில் போலி ஏ.டி.எம். கார்டுகளை உருவாக்கி, ஸ்கிம்மர் எந்திரம் மூலம் பலரது வங்கி கணக்குகளில் இருந்து மோசடியாக பணத்தை திருடியுள்ளனர். இதனை போலீசார் கண்டுபிடித்து 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணமும், பல்வேறு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த திருட்டில் வெளிநாட்டினரும் சம்பந்தப்பட்டு இருப்பார்கள் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். சமீபத்தில் நகர பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவம் நடந்துள்ளது. எனவே போலீசார் பகல் மற்றும் இரவு நேர ரோந்தை தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டுள்ளேன்.

பா.ஜ.க.வினர் பத்திரிகையாளர்களை விமர்சிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க. தரம் தாழ்ந்த அரசியலை செய்து வருகிறது. தனிப்பட்ட முறையில், தனிப்பட்டவர்களின் வாழ்க்கையை தரம் தாழ்ந்து விமர்சித்து வருகின்றது. எச்.ராஜாவை மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்