சத்தியமங்கலம் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றில் 7 மின் கம்பங்கள் சாய்ந்தன
சத்தியமங்கலம் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றில் 7 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் ஏற்பட்ட மின்தடையால் பல வீடுகள் இருளில் மூழ்கியது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இந்த சூறாவளிக்காற்றில் சத்தியமங்கலத்தை அடுத்த பெரியகுளம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் அந்த பகுதியில் உள்ள வெங்காய குடோன் ஒன்றும் அடியோடு இடிந்து விழுந்தது.
இதேபோல் பெரியகுளம் நாடார் காலனி பகுதியில் இருந்த 7 மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதனால் நாடார் காலனி பகுதியில் மின்தடை ஏற்பட்டது. பல வீடுகள் இருளில் மூழ்கின.
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர் மேற்பார்வையில், உதவி மின்பொறியாளர் சந்தோஷ்குமார் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் இணைப்பை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இரவு 11.30 மணி அளவில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள 100 வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
மீதம் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நேற்று காலை மீண்டும் தொடங்கியது. மதியம் 2 மணி அளவில் மின் இணைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் உள்ள வீடுகள், கிணறுகளுக்கான இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு பல வீடுகள் இருளில் மூழ்கியதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.