அரியலூர் மாவட்டங்களில் பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி

அரியலூர் மாவட்டங்களில் பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2018-04-21 22:30 GMT
அரியலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூரில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேப்பந்தட்டை தாசில்தார் பாரதிவளவன், வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வி.களத்தூர், திருவாலந்துறை, அகரம், பிம்பலூர் மற்றும் அயன்பேரையூர் ஊராட்சிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 150 பேருக்கு இலவச கியாஸ் அடுப்பு மற்றும் எரிவாயு சிலிண்டர் வழங்கினர். முடிவில் கியாஸ் ஏஜென்சி உரிமையாளர் குமரேஷ் நன்றி கூறினார்.

மங்களமேட்டை அடுத்துள்ள அத்தியூரில் பயனாளிகளுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரதீய ஜனதா மாவட்ட துணைத்தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி, வேப்பூர் ஒன்றிய தலைவர் கண்ணன் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லெப்பைக்குடிக்காடு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மகாலட்சுமி பாதுகாப்பாக கியாஸ் பயன்படுத்துவது குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அத்தியூர், இந்திரா நகர், பெருமத்தூர் உள்பட 10 கிராமங்களை சேர்ந்த 18 நபர்களுக்கு இலவச கியாஸ் அடுப்பு மற்றும் எரிவாயு சிலிண்டர் வழங்கப்பட்டது. முடிவில் இன்டேன் கியாஸ் மேலாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மணகெதி ஊராட்சியில் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் அமராவதி கியாஸ் ஏஜென்சி மேலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். மேலாண்மை இயக்குனர் (பண்டகசாலை) சமரசம் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் வட்ட வழங்கல் அலுவலர் சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச கியாஸ் அடுப்பு மற்றும் எரிவாயு சிலிண்டர் வழங்கி பேசினார். இதில் வருவாய் ஆய்வாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரியலூர் கிளை மேலாளர் அரிகரன் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்