மூலவைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு

கடமலை-மயிலை ஒன்றியத்தில், மூலவகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-04-21 22:15 GMT
கடமலைக்குண்டு, 

கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் பல ஓடைகள் ஒருங்கிணைந்து மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. வனப்பகுதியில் உற்பத்தியாகும் இந்த ஆறு வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர் கிராமங்களை கடந்து முல்லை பெரியாற்றுடன் இணைந்து வைகை அணையில் சேருகிறது.

கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இந்த ஆற்றில் இருந்து நீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்த நிலையில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் முழுவதும் மூலவைகை ஆற்றில் கலக்க விடப்படுகிறது.

இதனால் இந்த கிராமங்களில் ஆற்றில் கழிவுநீர் தேங்கி குட்டைப்போல காணப்படுகிறது. கழிவு நீருடன் பிளாஸ்டிக் தம்ளர், மதுபாட்டில் உள்ளிட்ட குப்பைகளும் தேங்கி கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட் டுள்ளது.எனவே மழை பெய்து ஆற்றில் நீர்வரத்து ஏற்படும் போது கழிவுநீர் உறை கிணற்றுக்குள் செல்வதால் அதனை குடிக்கும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவு நீர் மூலவைகை ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதுமட்டுமின்றி பொதுமக்கள் குப்பைகளை மூல வைகை ஆற்றில் கொட்ட தொடங்கியுள்ளனர். இதனால் மூலவைகை ஆறு நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்