டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சரிபார்ப்பு பணி
டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும் வசதி நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
தேனி,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி, கலந்தாய்வு நடத்தி பணி இடம் ஒதுக்கீடு செய்யப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு பணி சென்னையில் நடப்பது வழக்கம்.
தற்போது இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணியை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய வசதி நாளை (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த நடைமுறை அமலுக்கு வந்த பிறகு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.
முதற்கட்டமாக குரூப்-2 ஏ தேர்வுக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள இ-சேவை மையத்தில் நாளை தொடங்கப்பட உள்ளது. அதேபோல், தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங் களிலும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த பணிக்காக ஒரு பக்கத்துக்கு ரூ.5 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தகவலை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன அலுவலர்கள் தெரிவித்தனர்.