கோடையிலும் தண்ணீர் விழுகிறது பழைய குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை காலத்திலும் தண்ணீர் விழுவதால் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2018-04-21 21:00 GMT
தென்காசி, 

கோடை காலத்திலும் தண்ணீர் விழுவதால் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கோடை காலம் 

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். தற்போது கோடை காலம் என்பதால் குற்றாலம் பகுதிகளில் கடும் வெயில் அடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றாலம் பகுதியில் பெய்த மழையினால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்தது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து சென்றனர்.

இந்த நிலையில் மழையின்றி கடும் வெயில் அடித்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்தது. ஆனால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளில் மிகவும் குறைவான அளவில் தண்ணீர் விழுகிறது. ஆனால் பழைய குற்றாலம் அருவியில் சற்று அதிகமாக தண்ணீர் விழுந்தது.

பழைய குற்றாலத்தில் குவிந்தனர் 

தற்போது குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டு உள்ளதால் நேற்று குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அவர்கள் குடும்பம், குடும்பமாக பழைய குற்றாலம் அருவிக்கு சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். ஐந்தருவியிலும் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர். பழைய குற்றாலம் அருவிக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக வந்ததால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் நெரிசலில் சிக்கிக் கொண்டன. நீண்ட நேரத்திற்கு பிறகு வாகனங்கள் சென்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் மேலும் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்