உலக வரைபடத்தில் வேலூரை தேடவைத்தவர் சதீஷ்குமார் பாராட்டு விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று உலக வரைபடத்தில் வேலூரை தேடவைத்தவர் சதீஷ்குமார் என்று வேலூரில் நடந்த பாராட்டு விழாவில் அமைச்சர் வீரமணி பேசினார்.

Update: 2018-04-20 22:16 GMT
வேலூர்,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், பளுதூக்குதலில் வேலூர் வீரர் சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றார். அவர் நேற்று முன்தினம் இரவு வேலூருக்கு வந்தார். தங்கப்பதக்கம் வென்றுள்ள அவருக்கு வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வேலூர் பிரிவு சார்பில் நேற்று வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

வேலூர் கோட்டைமுன்பு உள்ள காந்திசிலை அருகில் இருந்து அவர் திறந்தஜீப்பில் ஊர்வலமாக, மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டார். மக்கான் சந்திப்பு, வடக்கு போலீஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தெற்கு போலீஸ் நிலையம், திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் வழியாக ஊர்வலம் நேதாஜி மைதானத்தை அடைந்தது. அங்கு அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் வரவேற்றார். போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்து பேசினார். விழாவில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் சதீஷ்குமாருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து பாராட்டி பேசினர்.

விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமாரை முதல்-அமைச்சர் பாராட்டியிருந்தாலும் அவர் நமது மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் நாம் அவரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம். இதுபோன்ற பாராட்டு விழா அவரை மேலும் ஊக்கப்படுத்தும்.

காமன்வெல்த் போட்டியில் சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்றதன்மூலம் அவர் உலக வரைபடத்தில் வேலூர் எங்கிருக்கிறது என்று உலக நாடுகளை தேடவைத்துள்ளார். நமது மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார். பதக்கம் பெற்றது அவராக இருந்தாலும் அதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

அவர் தொடர்ந்து விடாமுயற்சியுடன் இன்னும் பல சாதனைகள் படைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர்கள் விஜய், முகமதுஜான், எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, லோகநாதன், ப.கார்த்திகேயன், பயிற்சியாளர் விநாயகமூர்த்தி, சதீஷ்குமாரின் பெற்றோர் கலந்துகொண்டனர்.

ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வேன் - சதீஷ்குமார்

விழா முடிந்ததும் சதீஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வெல்லவேண்டும் என்பதை நோக்கியே என்னுடைய முயற்சி இருக்கும். பல தடைகளை தாண்டி பளுதூக்குதலில் தங்கம் வென்றுள்ளேன். சீனா மற்றும் ஜப்பான் வீரர்களையே போட்டியாக கருதுகிறேன். அவர்களை எதிர்கொள்ள கடுமையான பயிற்சியில் ஈடுபடுவேன். ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்ப்பேன். மாணவர்களும் விளையாட்டுகளில் சாதிக்கவேண்டும். அதற்கு அவர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வேலூரில் பளுதூக்கும் மையம் தொடங்கப்பட்டிருந்தாலும், விளையாட்டு அரங்கம் இல்லாமல் உள்ளது. எனவே விளையாட்டு அரங்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் வாக்குவாதம்

விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசிமுடித்ததும் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தனது ஆதரவாளர்களுடன் விழாமேடைக்குவந்தார். அரசு சார்பில் நடத்தப்படும் இந்த விழாவுக்கு இந்த தொகுதி எம்.எல்.ஏ.வான என்னை ஏன் அழைக்கவில்லை என்று அமைச்சரிடம் கேட்டார். உடனே அவருடன் வந்திருந்த அவருடைய ஆதரவாளர்களும் அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைச்சர் சமாதானம் செய்தார். இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்