முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் 1.21 லட்சம் பேர் பயன்
நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இதுவரை முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் 1.21 லட்சம் பேர் பயன் அடைந்து இருப்பதாக உதவி இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.
நாமக்கல்,
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளின் மண்டல ஆய்வு கூட்டம் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். இதில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட உதவி இயக்குனர் செல்வவிநாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் தமிழ்நாட்டில் இதுவரை 1.58 கோடி குடும்பங்கள் சேர்க்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதுவரை மொத்தம் 23 லட்சத்து 84 ஆயிரம் பயனாளிகள் ரூ.4 ஆயிரத்து 780 கோடி செலவில் பயன் அடைந்து உள்ளனர்.
நாமக்கல், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இதுவரை 7 லட்சத்து 36 ஆயிரத்து 411 குடும்பங்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, மொத்தம் 1.21 லட்சம் பயனாளிகள் ரூ.256 கோடி செலவில் பயன் அடைந்து உள்ளனர்.
இத்திட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 796 பயனாளிகள் உயர் அறுவை சிகிச்சை பெற்று பயன் அடைந்து உள்ளனர். தற்போது புதிதாக புலனாய்வு செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக 32 மாவட்டங்களிலும் உள்ள திட்ட அலுவலர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு செல்போன் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாவட்டங்களில் உள்ள புகார்கள் குறித்து உடனடியாக களப்பணியில் உள்ள அலுவலர்கள் மூலம் தகவல்கள் பெறப்பட்டு, அது தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்த புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டு, ஆஸ்பத்திரியின் மீது இடைக்கால தடை மற்றும் தகுதி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்ட பயனாளிகளிடமிருந்து ஏதேனும், பணம் வசூலிக்கப்பட்டு இருந்தால், அத்தொகையின் மீது 5 மடங்கு வரை அம்மருத்துவமனைக்கு அபராதம் விதிக்கப்படும். இத்திட்டத்தை பற்றி பயனாளிகளுக்கு ஏதேனும் சந்தேகம், புகார் இருந்தால், 24 மணிநேரமும் இயங்கும் எங்களது அழைப்பு மையத்தை 1800 425 3993 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகம், புகார்களை தெரிவிக்கலாம்.
இக்கூட்டத்தில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சரஸ்வதி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மண்டல மேலாளர் சிவக்குமார், திட்ட மேலாளர் ரமேஷ்குமார், மேலாளர் தினேஷ், மருத்துவ அலுவலர்கள் தேவசேனா, மிதுன், மாவட்ட திட்ட அலுவலர் சுரேஷ், திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.