மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் அறையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை

நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளரிடம் நேற்று காலையில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் பிற்பகலில் அவரது அறையில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.

Update: 2018-04-20 22:30 GMT
மதுரை,

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலைவிரித்த பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். ஏற்கனவே, பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள் நியமனம், பதவி உயர்வு, உறுப்புக்கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள் பணி நியமனம், கட்டிட ஒப்பந்த பணி உள்ளிட்ட விவகாரங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த உரையாடல் மேலும் சர்ச்சைகளை கிளப்பியது.

இந்த விவகாரம் பற்றி, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தானம் தலைமையிலான ஒரு நபர் கமிஷனும், தமிழக அரசு உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு சென்று துணைவேந்தர் செல்லத்துரையிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சில ஆணங்களை பெற்றனர். அதனை தொடர்ந்து , பல்கலைக்கழக பதிவாளர் சின்னையா மற்றும் சில அலுவலர்களை மதுரை விசாலாட்சிபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கினர்.

அதன்படி காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையா மற்றும் சில பல்கலைக்கழக அலுவலர்கள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு கருப்பையா தலைமையில் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சேகர் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் அவர்களிடம் நிர்மலாதேவி குறித்து பல்வேறு கேள்விகள் மற்றும் அவர் தொடர்புடைய ஆவணங்களை கேட்டனர். இந்த விசாரணை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படையினர், பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறைக்கு சென்று உதவி பேராசிரியை ரோசிட்டாவை சந்தித்தனர். அவரிடம், மேலாண்மைக்கல்வி துறையின் உதவி பேராசிரியர் முருகன் குறித்து சில கேள்விகளை கேட்டதாக தெரிகிறது. அவர் வணிகவியல் துறையை சேர்ந்தவரா அல்லது மேலாண்மைக்கல்வித் துறையை சேர்ந்தவரா என்று விசாரித்தனர்.

பின்னர், தனிப்படையினர் மாலை 3 மணிக்கு பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு பதிவாளர் சின்னையாவிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடந்தது. இந்த விசாரணை நேற்று மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. அத்துடன் அவரது அலுவலகத்தில் திடீர் சோதனையிலும் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது, சுமார் 45 பக்கங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களின் அசல் பிரதிகள் பதிவாளர் அலுவலகத்திலேயே ஒப்படைக்கப்பட்டன. நகல் பிரதிகளை மட்டும் போலீசார் எடுத்துச்சென்றனர்.

இதனால் பல்கலைக்கழக வளாகம் கடந்த 2 நாட்களாக பரபரப்பாக காணப்படுகிறது. பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் அடுத்த விசாரணை யாரிடம் நடக்க உள்ளது என்ற கலக்கத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்