ஊட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 47 கடைகள் அகற்றப்பட்டன

ஊட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த 47 கடைகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அதிரடியாக அகற்றினார்.

Update: 2018-04-20 22:15 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதால் ஊட்டிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பொதுத்தேர்வுகள் முடிந்து உள்ளதால் சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து உள்ளது. ஆகவே, ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) டாக்டர் முரளி சங்கர் ஆகியோர் நேற்று திடீரென ஆய்வு நடத்தினர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவின் முன்பகுதி, திபெத்தியன் மார்க்கெட், கமர்சியல் சாலையில் உள்ள காபிஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தாவரவியல் பூங்கா சாலை மற்றும் நடைபாதையோரங்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாலும், நடைபாதையில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாலும் அந்த கடைகளை அகற்ற கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து ஆவின் பாலகத்தில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யாமல் வடை, போண்டா, தேநீர் போன்றவை விற்பனை செய்யப்படுவதை நேரில் பார்த்தார். உடனே சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை அழைத்து ஆவின் பொருட்களை மட்டுமே கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். மறு ஆய்வுக்கு வரும்போது, பாலகத்தில் வேறு பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

திபெத்தியன் மார்க்கெட் அருகே செல்லும் கழிவுநீர் கால்வாயில் கடைக்காரர்கள் குப்பைகள் கொட்டுவதை கண்டறிந்தார். மழைநீர் மற்றும் கழிவுநீர் செல்லும் கால்வாயில் குப்பைகளை கொட்டக்கூடாது. மீறி கொட்டினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து சேகரமாகும் கழிவுநீர் நேரடியாக கால்வாயில் விடப்படுவது தெரியவந்தது. அதனை தொடர்ந்து கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அந்த ஓட்டலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வில் ஓட்டலில் உணவு பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த ஓட்டலை மூட கலெக்டர் உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து, போலீசார் அனுமதி அளிக்காத இடத்தில் ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா முன்பு ஆட்டோ நிறுத்தக்கூடாது என்று கூறினார். பழங்குடியினர் பண்பாட்டு மையத்தின் ஒரு பகுதியில் உள்ள நுழைவுவாயிலில் வைக்கப்பட்டு இருந்த கடையை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் நகராட்சிக்குட்பட்ட நவீன கழிப்பறைகள் சுகாதாரமாக இருக்கிறதா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்கண்ட அதிரடி ஆய்வினை தொடர்ந்து நடைபாதை மற்றும் சாலையோரங்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த 47 கடைகள் அகற்றப்பட்டன. கோடை சீசனை முன்னிட்டு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் எந்தவித இடையூறும் இன்றி வந்து செல்ல முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. 

மேலும் செய்திகள்