தாராபுரம் வனப்பகுதியில் மனித எலும்புக்கூடு, போலீசார் விசாரணை

தாராபுரம் வனப்பகுதியில் மனித எலும்புக்கூடு காணப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-04-20 23:45 GMT
தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தளவாய்பட்டிணம் கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்குள் நேற்று ஒரு மனித எலும்புக்கூடு கிடப்பதாக அலங்கியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் தலைமை காவலர் தனசேகர் ஆகியோர் வனப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

வனப்பகுதியானது புதர்கள் மண்டி உள்ளே செல்ல முடியாத நிலை இருந்தது. சிறிது தூரம் சென்றதும், வனத்துக்குள் கொடிய விஷமுள்ள பாம்புகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வனத்தைவிட்டு வெளியேறினார்கள். பிறகு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டனர். அதன் பிறகு போலீசார் வனத்துறை அதிகாரிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றனர். அப்போது அங்கு ஒரு புதர் அருகில் மனித எலும்புக்கூடை கண்டுபிடித்தனர். மாலை நேரமாகிவிட்டதால் வனப்பகுதிக்குள் வெளிச்சம் குறைவாக இருந்தது. இதனால் போலீசார் எழும்புக்கூடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்துவிட்டு, வனத்தைவிட்டு வெளியேறி விட்டனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

எலும்புக்கூட்டின் இடுப்பு பாகத்தில் இருந்த சிறிய உடையை வைத்து அது ஆணின் எலும்பு கூடாக இருக்கலாம் என தெரிகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனப்பகுதிக்கு அருகே உள்ள சென்னாக்கல்பாளையம், சுள்ளிமடத்தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (வயது 40) என்பவர் காணாமல் போய்விட்டதாக அவருடைய சகோதரி லட்சுமி என்பவர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் லட்சுமியையும், கிராம மக்களை அழைத்துச் சென்று எலும்புக்கூட்டின் இடுப்பில் இருந்து உடையையும் அதன் அருகே கிடந்த போர்வையையும் அடையாளம் காட்டச் சொன்னபோது, அவை சுப்பிரமணி பயன்படுத்தியது தான் என்று அடையாளம் காட்டியுள்ளனர். அதன் அடிப்படையில் வனப்பகுதிக்குள் கிடைத்துள்ள எலும்புக்கூடானது சுப்பிரமணி தான் என்று தெரியவருகிறது. வனத்துக்குள் வெளிச்சம் குறைவாக இருந்ததால் முழுமையான சோதனை எதுவும் செய்ய முடியவில்லை. நாளை (இன்று) மீண்டும் வனத்துறை அதிகாரிகளுடன் வனத்துக்குள் சென்று, எலும்புக்கூடை கைப்பற்றி, அதை மரபணு சோதனைக்காக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்படும். ஆய்வு அறிக்கையில் அது யாருடை எலும்புக்கூடு என்பது தெரியவரும். அதுவரை விசாரணை தொடரும் என்று கூறினார்கள்.

காணாமல் போனதாக கூறப்படும் சுப்பிரமணிக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் அவர் கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சுள்ளிமடத்தோட்டத்தில் இருந்த அவருடைய வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவருக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் தோட்டத்தில் அவரால் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வந்துள்ளது. இதனால் திம்மநாய்க்கன்பாளையத்தில் வசிக்கும் சுப்பிரமணியின் சகோதரி லட்சுமி தினமும் சுள்ளிமடத்தோட்டத்திற்கு வந்து சுப்பிரமணிக்கு உணவு கொடுத்துவிட்டு, 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் திடீரென சுப்பிரமணி காணாமல் போனது தெரியவந்துள்ளது. அதையடுத்து சுப்பிரமணியின் சகோதரி லட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார். வனத்துக்குள் இருந்த மனித எலும்புக்கூடானது, காணாமல் போன சுப்பிரமணிதான் என்று கருதினாலும், மனநிலை பாதிக்கப்பட்டவரான சுப்பிரமணி இதுவரை வனத்துக்குள் சென்றதில்லை என்று கூறப்படுகிறது. திடீரென வனத்திற்குள் அவர் செல்ல வேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை சுப்பிரமணி வீட்டிற்குள் தனியாக இருந்தபோது வனத்துக்குள் இருந்த கொடிய விலங்கு சுப்பிரமணி வீட்டிற்குள் புகுந்து அவரை கொன்று, அவரது உடலை வனத்துக்குள் இழுத்துச் சென்றதா? அல்லது சுப்பிரமணியை மர்ம நபர்கள் கொலை செய்து வனத்துக்குள் வீசிவிட்டனரா? என்கிற பல சந்தேகங்கள் கிராமத்து மக்களிடம் தற்போது எழுந்துள்ளது. இருப்பினும் போலீசாரின் முழுமையான விசாரணைக்கு பிறகுதான் இதற்கான பதில் தெரியவரும். வனப்பகுதிக்குள் மனித எலும்புக்கூடு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்