அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் 18 பவுன் நகை திருட்டு

ஆரணி அருகே அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண விழாவில் 18 பவுன் நகை திருட்டு போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-04-20 22:30 GMT
ஆரணி, 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியிலிருந்து சேவூர் செல்லும் பைபாஸ் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதனையொட்டி நேற்று முன்தினம் இரவு மணமகன் வரவேற்பு விழா நடந்தது.

நிகழ்ச்சி முடிந்தபின் மணமகனின் சகோதரிகள் சுதா, அனுராதா ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட அறைக்கு சென்றனர். அப்போது அந்த அறை கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடைகள் கலைக்கப்பட்டு இருந்தன. மேலும் சுதா, அனுராதா ஆகியோரது பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருட்டு போயிருந்தது. இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.அந்த அறையில் இருந்த தடயங்களையும், கைரேகைகளையும் கைரேகை நிபுணர்களை கொண்டு பதிவு செய்தனர்.

அனுராதாவின் கணவர் சண்முகம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு சென்று நகைகளை அங்கேயே வைத்துவிட்டு வந்தோமா? என பார்த்துவிட்டு வந்து பின்னர் புகார் அளிப்பதாகவும், தற்போதைக்கு 18 பவுன் நகை திருட்டு போனதாக புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் நடந்த திருமண மண்டபத்துக்கு ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். நகையுடன் வந்ததை கண்காணித்து மண்டபத்துக்குள் பின்தொடர்ந்து வந்தவர்கள் யார், யார்? நகைகளை கழுத்தில் அணியாமல் அறைக்குள் வைத்தது ஏன்?, நகையை கொண்டு வராமலேயே கொண்டு வந்ததாக நினைத்து புகார் அளித்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண விழாவில் முதலில் 100 பவுன் நகை கொள்ளை போனதாக கூறப்பட்டது. பின்னர் போலீசில் 18 பவுன் நகை மட்டுமே திருட்டு போனதாக புகார் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்