குடிமங்கலம் பகுதியில் அதிக மகசூல் கிடைக்கும் அவரைக்காய் சாகுபடி
குடிமங்கலம் பகுதியில் அவரைக்காய் சாகுபடியில் அதிக மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
குடிமங்கலம்,
குடிமங்கலம் மற்றும் அதன் சுற்றவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. குடிமங்கலம் பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நீண்டகால பயிரான தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
மாறாக குறுகிய கால பயிரான காய்கறி சாகுபடியில் அவர்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள். அதன்படி, தற்போது, குடிமங்கலம் பகுதியில் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு அவரைக்காய் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறைந்த அளவு தண்ணீரை கொண்டு சாகுபடி செய்வதால், அதிக மகசூல் கிடைப்பதோடு விவசாயிகளுக்கு நிரந்தர வருமானமும் கிடைக்கிறது என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.
இதுபற்றி விவசாயி ஒருவர் கூறும்போது, ஒரு ஏக்கருக்கு அவரைக்காய் சாகுபடி செய்ய ரூ.25 ஆயிரம் வரை செலவாகிறது. அவரை விதைத்த 60-வது நாளில் இருந்து அறுவடைக்கு தயாராகிவிடும். தொடர்ச்சியாக 90 நாட்கள் வரை 4 நாட்களுக்கு ஒரு முறை காய்கள் பறிக்கலாம். ஒரு ஏக்கருக்கு அதிக பட்சமாக 4 டன் வரை அவரை மகசூல் கொடுக்கும். தற்போது ஒரு கிலோ அவரை ரூ.35 வரை விற்பனையாகிறது. என்றார்.