பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.வின் கார் கண்ணாடி உடைப்பு
புதுவையில் பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.வின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி,
புதுவையில் பா.ஜ.க.வை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரையும் நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நேரடியாக நியமித்தது. இதை ஏற்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்துவிட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சாமி நாதன், சங்கர் ஆகிய 2 பேரும் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினர்.
இவர்களில் சங்கரின் வீடு புதுவை இளங்கோ நகர் முதலாவது குறுக்கு தெருவில் உள்ளது. இவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த காரின் பின்பக்க கண்ணாடியை யாரோ மர்மநபர் உடைத்து விட்டுச் சென்று உள்ளனர். இதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது காரின் பின்பக்க கண்ணாடியை பூட்டுடன் இணைக்கப்பட்ட இரும்புச் சங்கிலியால் அடித்து நொறுக்கி இருப்பது தெரியவந்தது. அந்த சங்கிலி காரின் பின்பக்கத்தில் கிடந்தது.
இதற்கிடையே பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்து பா.ஜ.க. நிர்வாகிகள் கூறுகையில், ‘சங்கர் எம்.எல்.ஏ.வுக்கு தொழில் ரீதியாக எதிரிகள் யாரும் இல்லை. அவரது அரசியல் வளர்ச்சி பிடிக்காமல் கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். குற்றவாளிகளை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும்’ என்றனர்.