வெள்ளிமலையில் பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் தொடர் போராட்டம்
வெள்ளிமலையில் பட்டா கேட்டு மலைவாழ் மக்கள் தொடர் போராட்டத்தை தொடங்கினர். இரவு, பகலாக ஒரே இடத்தில் அமர்ந்து கோரிக்கைகள் குறித்து பேசுகிறார்கள்.
கச்சிராயபாளையம்,
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் 171 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தலைமுறை தலைமுறையாக 1½ லட்சம் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்களை அனுபவித்து வருகின்றனர். அந்த நிலத்தை திருத்தி அதில் கேழ்வரகு, சோளம், தினை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்.
எனவே தாங்கள் அனுபவித்து வரும் நிலங்களுக்கு வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்க வேண்டும் என்று மழைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். ஆனால் பட்டா வழங்கப்படவில்லை.
இதனால் மலைப்பகுதி மக்கள் விவசாயம் செய்வதற்கு நிலத்தை அடமானம் வைத்து கூட்டுறவு சங்கம் மற்றும் வங்கிகளில் கடன் உதவி பெறமுடியாமலும், தமிழக அரசு வழங்கும் மானிய விலை விதைகள் மற்றும் விவசாய உபகரணங்கள் பெறமுடியாமலும் தவிக்கிறார்கள்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தமிழக அரசு சார்பில் வன உரிமை சட்டத்தின் கீழ் மழைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சிலருக்கு பட்டா வழங்க கலெக்டர் சுப்பிரமணியன் வந்தார். ஆனால் அந்த பட்டாவை மலைவாழ் மக்கள் வாங்க மறுத்து விட்டனர். வன உரிமை சட்டத்தின் கீழ் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டாம் என்றும், வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்க வேண்டும் என்றும் கலெக்டரிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்கக்கோரி தொடர்ந்து 3 நாட்கள் இரவு, பகலாக தொடர் போராட்டம் நடத்த மலைவாழ் மக்கள் முடிவு செய்தனர். அதன்படி இந்த போராட்டத்தை நேற்று காலையில் வெள்ளிமலையில் தொடங்கினர்.
மலைவாழ் மக்கள் அனுபவித்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், வனத்துறையிடம் அனுமதிபெற வில்லை என்ற காரணத்தால் பாதியில் நின்றுபோன சாலை பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும், கல்வராயன்மலையில் ரூ.50 கோடி மதிப்பில் 41 கிராமங்களை இணைக்கும் வகையில் வெள்ளிமலை-சின்ன திருப்பதி சாலை, கருநல்லி சாலை, கச்சிராயபாளையம்-வெள்ளிமலை இடையே சாலை அகலப்படுத்தும் பணி ஆகியவற்றையும் விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்துக்கு மலைவாழ் மக்கள் போராட்டக்குழுவை சேர்ந்த அண்ணாமலை, குபேந்திரன், சின்னதம்பி, மாணிக்கம், ரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டம் நாளை(சனிக்கிழமை) நள்ளிரவு வரை ஒரே இடத்தில் நடைபெறும் என்றும், போராட்டத்தில் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி பேசப்படும் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.