ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தர்மபுரி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் உள்பட 2 பேர் கைது

மானியத்தொகை வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் உள்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-19 23:00 GMT
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள நரசைய்யன்கவுண்டர் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32), இவர் துணிகளை காய வைக்கும் உலர் சலவை மையம் வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் ராம்குமார் உலர் சலவை எந்திரம் வாங்க ரூ.30 லட்சம் கடன் உதவி கேட்டு தர்மபுரி மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்தார். இதையடுத்து அவருக்கு 25 சதவீத மானியத்தில் மாவட்ட தொழில் மையம் கடன் வழங்கியது.

இந்த மானியத்தொகையின் முதல் தவணை ரூ.3¾ லட்சத்தை ஏற்கனவே ராம்குமார் ரூ.20 ஆயிரம் கொடுத்து பெற்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-வது தவணை மானியத்தொகை பெற ராம்குமார், தர்மபுரி மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ரமேஷ் (51), உதவி பொறியாளர் மனோஜ்தரன் (30) ஆகிய 2 பேரையும் நாடினார். அவர்கள் 2 பேரும் மானியத்தொகையை வழங்க ரூ.35 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனர். அதற்கு அவ்வளவு பணம் கொடுக்க முடியாது. ரூ.25 ஆயிரம் தருவதாக ராம்குமார் தெரிவித்துள்ளார். அதனை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராம்குமார் இதுகுறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டுகள் சுப்பிரமணி (தர்மபுரி), கிருஷ்ணராஜன் (கிருஷ்ணகிரி) ஆகியோர் தலைமையிலான போலீசார் ராம்குமாரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கி அதிகாரிகளிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் மறைந்திருந்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ராம்குமார் மாவட்ட தொழில் மையத்திற்கு சென்று பொதுமேலாளர் ரமேஷ், உதவி பொறியாளர் மனோஜ்தரன் ஆகியோரிடம் ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்கள் 2 பேரும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ரமேஷ் சென்னையையும், மனோஜ்தரன் சேலம் மாவட்டம் ஆத்தூரையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்