காசநோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் அறிவுரை

காசநோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் கதிரவன் கூறினார்.

Update: 2018-04-19 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள், தனியார் ஆய்வகத்தினர், மருந்து விற்பனையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

மத்திய அரசு வருகிற 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள காசநோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை பெறுவது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் காசநோய் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்வதோடு, பள்ளி மாணவ, மாணவிகள் மூலமாக ஊர்வலங்கள் நடத்த வேண்டும். தொடர்ந்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

சிறந்த சிகிச்சை

காசுநோய் முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பணியாற்றி வருகின்றன. இங்கு காச நோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சார்ந்த தனியார் மருத்துவமனையினர், தனியார் மருத்துவர்கள், ஆய்வகத்தினர் தங்களிடம் காசநோய் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் காசநோய் கண்டறியப்பட்டவர்கள் விவரங்களை உடனுக்குடன் காசநோய் துணை இயக்குநருக்கு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தெரிவிக்க வேண்டும். மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருந்து விற்பனையாளர்கள் தங்கள் கடைகளில் காச நோய்க்கான மருந்துகள் வாங்குபவர்கள் குறித்த விவரங்களை காசநோய் துணை இயக்குனருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர் கவிதா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷெரிப்தின், மேற்பார்வையாளர் சிலம்பரசன், மருந்து விற்பனை வணிகர்கள், தனியார் ஆய்வகத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்