இருவேறு சாலை விபத்துகளில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்புகள் 10 பேருக்கு தானம்

இருவேறு சாலை விபத்துகளில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்புகள் 10 பேருக்கு தானமாக பொருத்தப்பட்டது. இந்த சாதனையை சேலம் விம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் படைத்துள்ளனர்.

Update: 2018-04-19 22:45 GMT
சேலம்,

கரூர் மாவட்டம், காட்டுக்களம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகள் அபிநயா (வயது 21). இவர் கடந்த 16-ந் தேதி நள்ளிரவு 1 மணியளவில் நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் நடந்த விபத்தில் பலத்த காயம் அடைந்து சேலம் விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் அபிநயா முளைச்சாவு அடைந்தார். இதை டாக்டர்கள் ஆனந்த சாகர், சுதர்சன், அருண், அரவிந்த் ஆகியோர் உறுதி செய்தனர்.

இதேபோல் திருச்செங்கோடு செங்கோடம்பாளையம் பகுதியை சேர்ந்த தேவராஜின் மகன் நடராஜ் (20), பரமத்திவேலூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கினார். அவர் தலைப்பகுதியில் பலத்த காயம் அடைந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். அவரது இதய துடிப்பு எந்த நேரத்திலும் நிற்கலாம் என்ற நிலையில் அவருக்கும் விம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் அவரும் மூளைச்சாவு அடைந்திருப்பதை டாக்டர்கள் விவேக், காயத்ரி, பாலாஜி முருகா ஆகியோர் உறுதி செய்தனர். இது குறித்து உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மூளைச்சாவு அடைந்தவரின் உறவினர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதாக டாக்டர்களிடம் தெரிவித்தனர்.

இது குறித்து சென்னையில் உள்ள உடல் உறுப்பு தான குழுவிற்கு விம்ஸ் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் வி.பி.சந்திரசேகர் தகவல் தெரிவித்தார். பின்னர் தமிழக அரசின் உத்தரவுப்படி மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை சேலம், கோவை, சென்னை பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கல்லீரல், சிறுநீரகம், கணையம், கண் உள்பட உறுப்புகள் 10 பேருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

சேலத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிசிச்சையும் இந்த மருத்துவமனையில் நடைபெற்றது. சிறுநீரக நிபுணர் டாக்டர் ஜோன்ஸ் ரொனால்ட், டாக்டர் சரவணன், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன்பாபு, டாக்டர் ஜெயமுருகன், மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் ஜெய், டாக்டர் அண்ணாதுரை, விம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் கே.மீனாட்சிசுந்தரம் மற்றும் தலைமை மருத்துவ மேலாளர் டாக்டர் எஸ்.பாலாஜி, டீன் டாக்டர் செந்தில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், விம்ஸ் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் வி.பி.சந்திரசேகர் ஆகியோர் மிகவும் சிக்கலான இந்த பணியை சிறப்பாக செய்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்